சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறாரா அனுர?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிந்தது.
அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுமா, இந்தியாவுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுமா அல்லது அமெரிக்க சார்பு நிலைப்பாட்டில் இயங்குமா என்பதை இவ்வாறு தூதரகங்கள் அவதானித்து வருகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் சீனாவுக்கு சார்ப்பான போக்கையே பின்பற்றுமென கடந்த காலத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அதனை அநுரகுமார திஸாநாயக்க நிராகரித்ததுடன், தமது அரசு அணிசாரக் கொள்கையையே பின்பற்றும் எனக் கூறியிருந்தார். அதேபோன்று கடந்த ஆண்டு புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், இந்தியாவுக்கும் தெற்காசிய பிராந்தியத்துக்கும் பாதகமான வெளிவுறவு கொள்கையை தாம் ஆட்சிக்கு வந்தால் பின்பற்ற மாட்டேன் என இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் கூறியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கு வந்ததுடன், இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க இந்தியா தயாரக இருப்பதாக உறுதியளித்துச் சென்றார்.
அத்துடன், ஜனாதிபதி அநுரவை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, பொதுத் தேர்தலின் பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்குச் செல்ல உள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் அநுரகுமார திஸாநாயக்க, பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்த போதிலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மிக இரகசியமாக சீனாவுக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.
ஏனைய பயணங்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த போதிலும், அநுரவின் சீன பயணம் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. இந்தப் பயணத்திற்குத் தேவையான வசதிகளை சீன மத்திய அரசின் சக்தி வாய்ந்த பெண்மணியான சன் ஹையான் செய்து கொடுத்ததாகவும், அநுரவின் இந்தப் பயணத்தில் சீனாவின் இராஜதந்திரிகளுடன் சில உடன்பாடுகளை எட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதியாக அநுர பதவிப் பிரமாணம் செய்து கொண்டப் பின்னர் சீன தூதர அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பில் இலங்கைக்கு உடனடி ஆதரவாக, எதிர்வரும் டிசம்பரில் தொடங்கும் சுற்றுலாப் பருவத்தில் 30 இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்புவதாக சீன அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அடுத்த சுற்றுலா பருவம் தொடங்கும் போது அதை 60 இலட்சமாக உயர்த்தவும் சீன அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சீனாவின் இந்த நகர்வு குறித்து இலங்கையில் உள்ள மேற்குலக இராஜதந்திரிகள் தற்போது கவனம் செலுத்தியுள்ளனர். அதன் பிரகாரமே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சீன நட்பு குறித்து இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் உன்னிப்பாக அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சீனா, இந்தியா, அமெரிக்கா, மேற்குலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை சமநிலைப்படுத்தும் தேவை அநுர அரசாங்கத்துக்கு உள்ளதாக இலங்கையின் மூத்த அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்