புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க அழைப்பு விடுத்த டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கொலாராடோவின் அரோராவில் நடைபெற்ற பேரணியில் குடியேறிகளை ஆபத்தான குற்றவாளிகளாகக் காட்டியுள்ளார்.
அமெரிக்கக் குடிமக்களைக் கொல்லும் குடியேறிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வெனிசுவேலாவைச் சேர்ந்த ‘ட்ரென் டி அராகுவா’ கும்பலின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரின் படங்களுக்கு அருகில் நின்ற டிரம்ப், தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கும்பல் உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு தேசிய அளவிலான ‘ஆப்ரேஷன் அரோரா’வைத் தொடங்கப்போவதாகக் கூறினார்.
அடுத்த மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகக் களம் இறங்குகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசை வெற்றிகாணும் முயற்சியில் டிரம்ப் இறங்கியுள்ளார்.
சட்டவிரோதக் குடியுரிமை, வாக்காளர்களின் முதன்மை கவலையாக உள்ளதையும், அதனைக் கையாள ஆகச் சிறந்தவர் டிரம்ப் என்று பல வாக்காளர்கள் கருதுவதையும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
அமெரிக்க மாநிலங்களில் கிட்டத்தட்ட பாதி மரண தண்டனைக்குத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், டிரம்ப்பின் மரண தண்டனை பரிந்துரை குறித்து கருத்து கேட்டபோது ஹாரிஸ் இயக்கத்தினர் உடனடியாக அதற்குப் பதில் அளிக்கவில்லை.