சீரற்ற வானிலையால் மூவர் மரணம் : இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!
நாட்டின் 12 மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், பலத்த காற்று, காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 33,379 குடும்பங்களைச் சேர்ந்த 129,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக 3 பேர் கொழும்பிலும் மற்றையவர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மூன்று மரணங்களும் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. 02 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வீடு முற்று முழுதாகவும், 238 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 81 தங்குமிடங்களில் 1,751 குடும்பங்களைச் சேர்ந்த 6,954 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை, கம்பஹா, கொழும்பு, கிளிநொச்சி, கேகாலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, காலி, பொலன்னறுவை, கண்டி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.