அனர்த்தத்தினால் பாத்திக்கப்பட்டோருக்கு நிவாரணக் குழுக்கள் அனுப்பி வைப்பு
கம்பஹா, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்காக இலங்கை கடற்படையின் எட்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிவாரணக் குழுவினர் இன்றும் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடும் மழை காரணமாக களுகங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆகிய ஆறுகள் நிரம்பி வழிவதால் கம்பஹா, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் கடுவெல, மாபிம, நவகமுவ, இஹலகம, ஜா-எல மற்றும் நாத்தாண்டிய ஆகிய இடங்களில் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக குழுக்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவுவதற்காக படகுகள் மூலம் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்குதல், 4,876 பேருக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுகளை விநியோகித்தல், நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ள மூவரை மீட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வழிநடத்துதல் உள்ளிட்ட பணிகளை நிவாரணக் குழுக்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
DMC உடன் இணைந்து செயற்படும் இலங்கை கடற்படையானது மேற்கு கடற்படை கட்டளையில் 22 நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையில் 9 குழுக்களும் மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையில் 17 குழுக்களும் என மொத்தம் 48 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.