பன்றிகள் மத்தியில் பரவி வரும் தொற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் பன்றிகள் மத்தியில் பரவி வரும் 'Porcine Reproductive and Respiratory Syndrome' (PRRS) எனப்படும் மிகவும் தொற்றக்கூடிய வைரஸ் நோயானது, கட்டுப்பாட்டை மீறி பரவிவருவதாக கூறப்படுகிறது.
நிலைமை குறித்து கருத்து தெரிவித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் டாக்டர் தாரக பிரசாத், “ஆரம்பத்தில் காட்டுப்பன்றிகளை தாக்கிய இந்நோய் தற்போது பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கும் பரவியுள்ளது. எனவே, நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
எவ்வாறாயினும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உட்கொள்வதால் மனிதர்கள் பாதிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினை பண்ணைகளில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பன்றிகள் சுமார் இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளதாகவும் அது வேகமாக பரவி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் வைரஸ் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் கால்நடை அலுவலகங்களில் கிடைக்கவில்லை என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.