தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் : 03 ஊடகவியலாளர்கள் பலி!
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல் காரணமாக மூன்று ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கின. லெபனானில் இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்கன் கூறுகிறார்.
லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் நீண்ட காலம் தொடர்வதை அமெரிக்கா விரும்பவில்லை என்றார்.
இதேவேளை, ஈரானுக்காக உளவு பார்த்ததாக 7 இஸ்ரேலியர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இஸ்ரேலின் எதிரி நாடாகக் கருதப்படும் ஈரானுக்கு இவர்கள் சுமார் இரண்டு வருடங்களாக உளவுப் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்படி யுத்த மோதல்களின் போது எதிரி நாட்டுக்கு தகவல் வழங்கியதாகவும் அவர்களுக்கு உதவியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஹைஃபா நகரம் உட்பட வடக்கு இஸ்ரேலில் வசிப்பவர்கள்.
அவர்களில் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய ஒரு சிப்பாய் மற்றும் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறார்களும் அடங்குவர்.