துபாய் செல்ல விசா தேவையில்லை!
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு துபாய் உட்பட ஐக்கிய அரபு அமீரக (UAE - யு.ஏ.இ) நாடுகளுக்கு 'விசா ஆன் அரைவல்' (Visa on Arrival) வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இந்திய குடிமக்கள் யு.ஏ.இ விமான நிலையத்தில் விசாவைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தியர்களுக்கு 'விசா ஆன் அரைவல்' வசதியைப் பல நாடுகள் வழங்குகின்றன. அதாவது அந்த நாடுகளுக்குச் சென்றபின் அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம்.
'விசா ஆன் அரைவல்’ என்றால் என்ன? வழக்கமான விசா நடைமுறைகளில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது? விசா ஆன் அரைவல் வசதி இருக்கும் நாடுகளுக்குப் பயணம் செய்யும் போது நாம் மனதில் கொள்ள வேண்டிய நிபந்தனைகள் என்ன? இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விசா ஆன் அரைவல்' வசதி இருக்கும் நாடுகளுக்குச் செல்ல முன்னரே விசா பெற வேண்டியதில்லை. அந்த நாடுகளுக்குச் சென்றவுடன் விமான நிலையத்திலோ அல்லது துறைமுகத்திலோ உடனடியாக விசா பெற்றுக்கொள்ள முடியும்.
அவசரகால பயணத் திட்டத்திற்கும், அவசர சூழலிலும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த நாட்டில் தரையிறங்கிய பிறகு, விமான நிலையத்தில் உள்ள 'விசா ஆன் அரைவல்’ கவுன்டருக்குச் சென்று உங்கள் ஆவணங்களைக் காட்டி விசாவைப் பெற வேண்டும். ஆனால் உங்கள் ஆவணங்களில் ஏதேனும் சிக்கல் இருந்தால் உங்கள் விசா நிராகரிக்கப்படலாம். இந்த விசா வழங்கும் முறையை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'விசா ஆன் அரைவல்' வசதி குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த நாட்டில் தங்குவதற்கு உங்களை அனுமதிக்கிறது. சில நாடுகள் இந்தியர்களுக்கு விசா இல்லா அனுமதியை வழங்குகின்றன. 'விசா இல்லா அனுமதி’ (visa free country) என்றால், அந்த நாட்டிற்குச் செல்ல விசா தேவையில்லை. உங்களிடம் முறையான பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும். விசா இல்லாமல் அனுமதிக்கும் நாடுகளில் தங்க குறிப்பிட்ட காலம் வரை அனுமதி வழங்கப்படும். இதற்கென தனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விசா ஆன் அரைவல்’ விதிமுறைகள் என்ன?
ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு 'விசா ஆன் அரைவல்’ விதிகள் இருக்கும். பொதுவாக வருகையின் போது விசா எடுக்கும் வசதியை நாம் பயன்படுத்தும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1) தகவல்: நீங்கள் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புகிறீர்களோ, அதற்கு முன் அங்கு இருக்கும் விதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க வேண்டும். இதுபோன்ற தகவல்களை அந்த நாட்டின் தூதரகத்தின் இணையதளத்தில் பெற முடியும்.
2) வருகையின் போது விசா - அந்த நாட்டின் விமான நிலையம் அல்லது துறைமுகத்திற்கு வந்த பிறகு, குடிவரவுப் பிரிவு பகுதியில் உள்ள 'விசா ஆன் அரைவல்’ கவுண்டருக்குச் செல்லுங்கள்.
3) ஆவணங்கள் - தேவையான அனைத்து ஆவணங்களையும் முன்கூட்டியே தயார் செய்யவும். பெரும்பாலும், பாஸ்போர்ட், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருகை-புறப்பாடு படிவம், பயணத்திற்கான காரணம், ஹோட்டல் முன்பதிவுத் தகவல், தேவையான பணம் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
4) விண்ணப்பக் கட்டணம் - அனைத்து ஆவணங்களையும் குடிவரவு அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். வேறு ஏதேனும் படிவம் தேவைப்பட்டால் அதையும் வாங்கி தகவல்களை உள்ளிட வேண்டும். உள்ளூர் கரன்சி, அல்லது அந்த நாட்டில் செல்லுபடியாகும் கரன்சியில் விசா கட்டணத்தைச் செலுத்துங்கள்.
உங்களது அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், குடிவரவு அதிகாரி விசாவை விநியோகித்து உங்கள் பாஸ்போர்ட்டில் முத்திரையிடுவார்.
விசா ஆன் அரைவல்' பெறுவது எளிதா? 'சீ வே கன்சல்டன்ட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குர்ப்ரீத் சிங், விசா ஆன் அரைவல் ஒரு சிறந்த வசதி என்று நம்புகிறார். ஆனால் முடிந்தவரை உங்கள் விசாவை முன்கூட்டியே பெற முயற்சிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
சில நேரங்களில், உங்கள் ஆவணங்களில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உங்கள் விசா நிராகரிக்கப்படலாம். அதனால் நீங்கள் திருப்பி அனுப்பப்படலாம். அத்தகைய நிச்சயமற்ற தன்மையைத் தவிர்க்க பயணத்திற்கு முன்பே விசாவிற்கு விண்ணப்பிப்பது நல்லது.
இந்த நாடுகள் தங்கள் விதிகளையும் கட்டணங்களையும் மிக விரைவாக மாற்றிக் கொள்கின்றன என்கிறார் குர்பிரீத் சிங். எனவே விதிமுறைகளை முழுமையாகப் படிப்பது மிகவும் அவசியம். விசா நீட்டிப்புக்கு உத்தரவாதம் இல்லை. எனவே சரியான திட்டமிடல் தேவை.