காசா போலியோ முகாமில் இஸ்ரேல் தாக்குதல் - உலக சுகாதர அமைப்பு கண்டனம்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அடிப்படை சுகாதர வசதிகள் மற்றும் உணவு இல்லாமல் பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமத்தில் உள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடும் , நோய்த் தொற்று ஏற்படும் அபயமமும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே உலக சுகாதர அமைப்பின் முயற்சியின் பேரில் காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 2 கட்டமாக நடந்து முடிந்த சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 4,51,216 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் , 3வது கட்ட சொட்டு மருந்து முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த அக்டோபர் 23ந்தேதி நடக்க இருந்த இந்த முகாம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த முகாம் நடத்தப்பட்டது.
அந்த வகையில் வடக்கு காசாவில் ஷேக் ரத்வான் ஆராம்ப சுகாதார நல மையத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக பெற்றோர்கள் வந்திருந்தபோது அந்த சுகாதர மையம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதர அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ், போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஒப்புதலுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிப்பதற்கான புனித தன்மைக்கு தீங்கு ஏற்படுத்துவதாகும் என தெரிவித்துள்ளார்.