ஸ்பெயின் கனமழை மற்றும் வெள்ளம் - பலி எண்ணிக்கை 214 ஆக உயர்வு
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தது. அங்குள்ள கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்தது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீருடன் சேறும் வீடுகளைச் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஏராளமான சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள், கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வாலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.வெள்ளப் பெருக்கில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கிய பலர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. வாலென்சியா பகுதியில் மட்டும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
மீட்புப் பணிகளுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் மாயமாகி உள்ளதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.