அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் - 2024! ஜூலி சங் வெளியிட்டுள்ள தகவல்
நமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும். ஜனநாயகம் ஒவ்வொரு வாக்கிலும், ஒவ்வொரு சிந்தனையிலும் வாழ்கின்றது என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றுவரும் நிலையில், கொழும்பில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை அவதானித்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமெரிக்கத் தூதுதர் ஜூலி சங், மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நமது ஜனநாயகத்தின் அடையாளமான 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலையும், போட்டியையும் காண எமது கூட்டத்துக்கு வருகை தந்ததையிட்டு பெருமை கொள்கிறேன்.
இந்த காலை நேரத்தில் இவ்வளவு பேரும் சேர்ந்து நமது தேர்தல் செயல்முறையைப் பற்றி அறிய ஆர்வமுடன் இங்கே கூடியுள்ளமை உற்சாகமாக உள்ளது. இன்றைய நாள் அமெரிக்க ஜனநாயகத்திற்கு முக்கியமான தருணமாகும்.
இங்கு பங்கேற்கும் உங்களைப் பார்த்து, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை உலகம் முழுவதும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்கிறேன். உலகம் இணைந்துள்ள இந்த காலத்தில், அமெரிக்காவில் எடுக்கும் முடிவுகள் மற்றும் கொள்கைகள் உலகத்தின் மீது தாக்கம் செலுத்துகின்றன. என் தூதரக குழுவிற்கு ஒரு பெரிய நன்றி கூற விரும்புகிறேன், அவர்கள் நமது ஜனநாயகத்தின் கோட்பாடுகளைப் பகிர்வதற்கான இந்நிகழ்வை உருவாக்கினர்.
ஜனநாயகமும் “டோனட்” டுகளும் சேரும் நிகழ்ச்சி எப்போதும் மகிழ்ச்சியானது. அமெரிக்க ஜனநாயகம் மாற்றமடையும் தன்மை கொண்டது.
இது தசாப்தம் தோறும் நவீனமாகத் திகழ்ந்து, புதுப்பிக்கப்படும். நமது அரசாங்கத்தை, நிறுவனங்களை வலுப்படுத்துவது அவசியமாகும். பழைய செயல்முறைகளை புதுப்பித்தல், புதிய சவால்களை எதிர்கொள்வது, அல்லது நமது தலைவர்களை தெரிவு செய்வது போன்றவற்றில் மக்கள் பங்கு பெறுதல் இவை ஜனநாயகத்தின் அடிப்படையாகும்.
நமது அமெரிக்க ஜனநாயகம் நிரந்தரமாகச் செயல்படக்கூடிய ஒன்றல்ல. அது எப்போதும் வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கும் ஒன்றாகும். நமது ஜனநாயகம் எவ்வாறு இன்றைய தலைமுறையால் பராமரிக்கப்படுகிறது என்பதை நாமே இன்று காண்கிறோம். இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள், உங்களிடம் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. தேர்தல்களைப் பற்றி விவரிப்பது வெறும் முடிவுகளை அறிவிப்பதற்கான விஷயம் மட்டுமல்ல; உண்மை மற்றும் துல்லியமான தகவல்களை மக்கள் பெறுவதற்காக பாடுபடுகிறீர்கள்.
இது ஜனநாயகத்தின் அடிப்படைச் செம்மையை வலுப்படுத்துகிறது.
நமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும். ஜனநாயகம் ஒவ்வொரு வாக்கிலும், ஒவ்வொரு சிந்தனையிலும் வாழ்கின்றது.