ஸ்பெயின் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஸ்பெயில் உள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுமார் 5 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கின்போது பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர் தப்பி உள்ளனர்.
கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் கிடைக்காமலும் ஏராளமானோர் அவதியடைந்தனர். இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு, உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட இந்த வெள்ள பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில், வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி ஆஸ்கார் புவென்ட்டே தெரிவித்துள்ளார்.
இதில் வேலன்சியா நகரத்தில் 215 பேரும், காஸ்டில்-லே மாஞ்சா பகுதியில் 7 பேரும், அந்தலூசியா நகரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 48 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன 78 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.