அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள மந்திரிகள், அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் வால்ட்சை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியான மைக்கேல் வால்ட்ஸ், புளோரிடா மாகாணத்தில் 3வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கான பாராளுமன்ற காகசின் இணைத் தலைவராக உள்ளார். காகஸ் என்பது இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த பிரதிநிதிகள் சபையில் உள்ள எம்.பி.க்களின் இருகட்சி கூட்டணியாகும்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய மந்திரியாக செனட்டராக உள்ள மார்கோ ரூபியோவை டிரம்ப் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்பதவி இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு கிடைக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அவரை டிரம்ப் நிராகரித்துள்ளார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியூயாா்க் 21-வது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எலீஸ் ஸ்டெபானிக்கை டிரம்ப் நியமித்துள்ளாா்.
எல்லை விவகாரங்களுக்கான பொறுப்பாளராக, குடியேற்றம் மற்றும் சுங்க விதிகள் அமலாக்கத் துறையில் அதிபரின் இயக்குநராகப் பதவி வகித்துள்ள டாம் ஹோமனை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளாா்.