சுயலாப அரசியலை செய்ததன் விளைவே தமிழ்த் தேசிய கட்சிகளின் தோல்விக்கு காரணம்!
போருக்கு பின்னான கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மக்களுக்கான உண்மையான அரசியலை செய்யாமல் சுயநல, சுயலாப அரசியலை செய்ததன் விளைவே இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள்.
எல்லா விடயங்களிலும் மக்களுடன் கூடவே இருந்து, தங்களுக்காக ஒரு அரசியல் பிரதிநிதி இருக்கிறார் என மக்களை உளப்பூர்வமாக உணர வைத்து, மக்களுக்கான உண்மையான அரசியலை செய்யாததன் விளைவு. பாராளுமன்ற தேர்தல் அரசியலில் ஈடுபட விரும்பும் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு குறை நிறைகளை கேட்டு நடவடிக்கையெடுக்காமல் ஐந்தாண்டுக்கொருமுறை மட்டும் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்க செல்லும் அசிங்க அரசியலின் விளைவு.
தமிழ்த் தேசியம் பேசும் பிரதான கட்சிகள் உடைந்து சிறு துண்டுகளானமையும், பல சுயேட்சைக் குழுக்கள் இறங்கியமையால் ஏற்பட்ட அதிருப்தி அரசியலின் விளைவு. பல வேட்பாளர்கள் தேர்தல் அறிவித்த உடன் ஒன்று இரண்டு மாதங்கள் மட்டும் மக்கள் மத்தியில் வேலை செய்வதாக நடிக்கும் ஏமாற்று அரசியலின் விளைவு. தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்து இயங்கும் எந்தக் கட்சிக்குமே தொடர்ந்து இயங்கும் அலுவலகம் கிடையாது. அலுவலகத்துக்கான கட்டமைப்பும் கிடையாது.
கட்சியின் முக்கியஸ்தர்கள், எம்பிக்களை கூட வாரம் ஒருமுறையாவது பொதுமக்கள் சந்தித்து குறை நிறைகளை கூறும் வாய்ப்புகள் இல்லை. அன்று மாமனிதர் ரவிராஜ் அப்படியான ஒரு அலுவலகம் வைத்திருந்தார். ஒழுங்கான கட்டமைப்பில்லாத அரசியலின் விளைவு. போருக்கு பிறகான நாட்களில் மக்கள் மத்தியில் முகாமிட்டிருந்து வேலை செய்திருக்க வேண்டிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தாங்களும் தங்களின் குடும்பங்களும் சுகபோகமாக வாழ்வதற்காக மக்களின் அபிலாசைகளை பலியிட்டதன் விளைவு.
தாங்கள் மட்டும் தான் தமிழ்த் தேசியத்துக்காக போராடுகிறோம் ஏனையவர்கள் எல்லோரும் தேவையென்றால் எமக்குப் பின்னால் வாருங்கள் என எகத்தாளமாக நடந்து மற்றவர்களை எடுத்தெறிந்து கொண்டு கொள்கைக்காக பின்னால் திரண்ட பலரையும் சிதறடித்ததன் விளைவு. 2000 க்கு பிறகு பிறந்த பலருக்கும் முறையாக தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை கடத்தாமையும், அது சார்ந்த அரசியல் வாழ்வு முறைக்குள் அவர்களை கொண்டுவராததன் விளைவு.
மக்கள் மத்தியில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தமிழ்த் தேசியம் சார்ந்து தீவிரமாக இறங்கி வேலை செய்பவர்கள் யாரென்றாலும் வேட்புமனுவை தாக்கல் செய்தால் போதும் தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை.
அவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்த விடையத்தில் தேசிய மக்கள் சக்தி கச்சிதமாக காய் நகர்த்தியுள்ளது என சொல்லலாம். கிராம மட்டகங்களில் இருந்து அரசியல் கட்சி அலுவலகங்கள் வரை நேர காலம் பார்க்காமல் கட்சிக்காக உழைத்தார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை தனி மனிதர்களுக்கான பிரச்ச்சாரங்களை விட கட்சியும் அதன் கொள்கைகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்தவர்கள். அதன் விளைவுதான் இந்த வெற்றி. உண்மையா சொல்லப் போனால் முப்பது வருடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் கிடைத்த வெற்றி.
ஆனால் தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் தேர்தல் அரசியலை நோக்காக கொண்டு மாத்திரமே செயற்பட்டார்கள். வெறுமனே பார் பொமிற்ருக்களுக்கும், மண் கடத்தல் பொமிற்ருக்களுக்கும் மட்டுமே அவர்கள் வேலை செய்ததன் விளைவுதான் அவர்களுக்கு கிடைத்த தோல்வி.
இனியாவது அவர்கள் மக்கள் நலன் கருதி சிந்தித்து செயற்படா விட்டால் தமிழ் கட்சிக்களுக்கே வரலாற்றில் இடம் இல்லாமல் போய்விடும். வெறும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தை விட்டு விலகி விட்டார்கள் எனக் கூறுவது நகைப்புக்கிடமானது.
அத்தகைய புலம்பல்களும் தேவையற்றது.
தமிழ்மக்களுக்கு தேவையானது பலரையும் சிதறடிக்கும் கட்சியரசியல் இல்லை. மக்கள் அரசியல். மக்களுக்கான அரசியல்.