40 ஆண்டு கால லெபனான் சிறை கைதியை விடுவிக்க பிரெஞ்சு நீதிமன்றம் உத்தரவு
பாலஸ்தீன ஆதரவு லெபனான் நாட்டவரான போராளி ஒருவரை விடுவிக்க பிரெஞ்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு தூதர்கள் இருவரை கொலை செய்த வழக்கில் குறித்த நபர் கடந்த 40 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
கடந்த 1984ல் Georges Ibrahim Abdallah கைதாகியுள்ளார். 1982ல் முன்னெடுத்த கொலை தொடர்பில் 1987ல் அப்தல்லா தண்டனைப் பெற்றார்.
இந்த நிலையில் எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, பிரான்சில் இருந்தும் வெளியேறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்தல்லாவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள ஒரே ஒரு நிபந்தனை, பிரான்சை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும், இதன் பின்னர் இனி ஒருபோதும் பிரான்சில் நுழையக் கூடாது என்பது மட்டுமே. PFLP அமைப்பில் கெரில்லா போராளியாக செயல்பட்டவர் அப்தல்லா.
அமெரிக்க இராணுவ உதவியாளர் சார்லஸ் ராபர்ட் ரே மற்றும் இஸ்ரேலிய தூதர் யாக்கோவ் பார் சிமன் டோவ் ஆகியோரின் கொலைகளில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
அவரது விடுதலையை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது, ஆனால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று லெபனான் அதிகாரிகள் பலமுறை கூறி வந்துள்ளனர்.
தற்போது 73 வயதாகும் அப்தல்லா, தாம் ஒரு உண்மையான போராளி என கூறிவருவதுடன், பாலஸ்தீன மக்களின் உரிமைக்காக போராடியதாகவும், தாம் ஒரு குற்றவாளி அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது 11 வது முறையாக அவரை விடுவிக்க எடுக்கப்படும் முயற்சியாகும். அவர் 1999 ஆம் ஆண்டு முதல் பரோலுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தார், ஆனால் அவரது முந்தைய விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.