நைஜீரியாவில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் அபுஜா சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினரும் வரவேற்பு அளித்தனர். கடந்த 17 ஆண்டில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்தியா, நைஜீரியா இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடம் அவர் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, பிரேசில் செல்லும் பிரதமர் மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் 18-ம் தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார். மாநாட்டுக்கு இடையே பிரேசில் அதிபர் உள்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து, கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 19ம் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார். 20ம் தேதி அதிபர் இர்பான் அலியை சந்தித்து பேச உள்ளார். இதையடுத்து கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.