கனடாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் - கடவுச்சீட்டு விநியோகம் பாதிப்பு
கனடாவில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு கவலையான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் தபால் ஊழியர்கள் போராட்டம் கடவுச்சீட்டு விநியோகத்தை மோசமாக பாதித்துள்ளது. குறிப்பாக கனடிய தபால் திணைக்கள பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே கடவுச்சீட்டுக்களை தபால் மூலம் அனுப்பி வைப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 85 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் தேங்கி கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த எட்டாம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சத்தினால் கடவுச்சீட்டுக்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 15 ஆம் தேதி முதல் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சம்பளம், பணி சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தினால் மில்லியன் கணக்கான மக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தபால் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்திருந்தாலும் அந்த விண்ணப்பங்கள் கிடைப்பதற்கு காலதாமதம் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.