நியூயார்க்கில் இருந்து விசா இன்றி விமானத்தில் பயணித்த பெண் : பிரான்ஸில் தஞ்சம் கோருவதாக தகவல்!
நியூயார்க்கில் இருந்து பாரிஸுக்கு விமானத்தில் பயணித்த பெண், பிரான்ஸில் தஞ்சம் கோர முயற்சிப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
57 வயதான ஸ்வெட்லானா டாலி புகலிடத்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாத காரணத்தால், அவர் நாட்டிற்குள் நுழைவதை பிரான்ஸ் அதிகாரிகள் வெளிப்படையாக மறுத்து வருவதாகவும், அவரை விமான நிலையத்திலேயே முடக்கி வைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நியூயார்க்கின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு போர்டிங் பாஸ் இல்லாமல் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணித்து பாரிஸை வந்தடைந்துள்ளார்.
விசா இல்லாததால் அவர் நாட்டிற்குள் நுழைய மறுக்கப்பட்டதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்தனர்.
அவர் கைது செய்யப்படவோ, அல்லது தடுத்துவைக்கப்படவோ இல்லை என்றாலும் திரும்பியதும் குற்றவியல் அத்துமீறல் மற்றும் சேவைகள் திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்ள நேரிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அவர் சட்டவிரோதமாக விமானத்தில் பயணித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.