யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகரிக்கும் தற்கொலைகளுக்கு அதிகரிக்கும் மதுபானசாலைகளா காரணம்?
இலங்கையில் போருக்கு பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் அதிகளவில் போர்த் தாக்கத்திற்கு உள்ளான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. வழமையாக போர் சூழ்ந்த பிரதேசத்தில் போர் நிறைவுற்றதும் மக்கள் மத்தியில் பல்வேறு மன தாக்கங்கள் வடுக்கள் படிந்திருக்கும்.அவற்றை இல்லாமல் செய்வது மிகவும் கடினமான செயற்பாடு.
இந்த நிலையில் மக்களுக்கு மன அழுத்தம் என்பது தற்பொழுது மக்கள் மத்தியில் வேரூன்றி காணப்படுகின்றது. அதிகளவான தற்கொலைக்கான காரணங்களின் பட்டியலின் அடிப்படையில் 90 சதவீதம் தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமாக அமைகின்றது. இது குறித்து மக்கள் மத்தியில் போதிய அறிவின்மையே காணப்படுகின்றது.
தற்போதும் தற்கொலைகள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. குறிப்பாக முறையற்ற போதைப்பொருள் பாவனை, அதிகரித்த வேலைப்பளு, நெருங்கிய உறவுகளின் திடீர் பிரிவு அல்லது எதிர்பாராத மரணம், பரீட்சை மற்றும் கல்வி சுமை அதிகரித்தல், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமை போன்ற தவறான இளமைப்பருவ பாலியல் நடத்தைகள், தொடர்ச்சியான ஏமாற்றங்கள் போன்ற காரணிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சியைப் பொறுத்த மட்டில் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் ஒரு பொறுப்பற்ற தன்மை காணப்படுகின்றது. கல்வி என்றாலும் சரி வேலை என்றாலும் சிலர் அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லாதது போல் இருக்கின்றார்கள்.
வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அதிகளவான பணங்களை இவர்களுக்கு அனுப்பும் பொழுது அவர்கள் உழைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற உணர்விற்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு சமூகத்தில் எல்லாம் இலகுவாக கிடைத்து விடுகின்றது. ஒவ்வொன்றையும் கஸ்ரப்பட்டு பெறவேண்டிய சூழல் கிடைப்பதில்லை.
கேட்டவுடன் எல்லாமே கிடைத்து விடுகின்றது. அவர்கள் சமூகத்துடன் எதிர்நிச்சல் போட தயாரில்லை. இவ்வாறு கேட்டவுடன் எல்லாம் கிடைத்த சார்ந்தப்பதில் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அது கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு அதை போராடிப் பெற வேண்டும் என்ற தைரியம் கிடைப்பதில்லை எனவே கேட்ட பொருள் கிடைக்கவில்லை என்னும் மனவிரக்தியில் அவர்கள் உடனடியாக தற்கொலைக்கு செல்கின்றனர்.
அத்தோடு அதிகளவான கையடக்க தொலைபேசி பாவனை அதில் வரும் விளையாட்டுக்கள் மூலமாகவும் அண்மையில் அதிகளவான இளைஞர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். பெற்றோரின் கண்காணிப்பில் இல்லாமல் கையடக்க தொலைபேசிகளை பாவிக்கும் பொழுது அதற்கு அடிமையாகி சில இளைஞர்கள் பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர் .
அதன்மூலமாகவும் சில இளைஞர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். அத்துடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக வரும் ஒரு நாள், இரு நாள் காதல் தோல்வி மூலமாகவும் பல தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தினூடாக மலர்ந்த காதல் தோல்வியினால் இளைஞனை ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன.
இவ்வாறு அண்மை காலங்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் இளைஞர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் அதிகளவில் மதுபானசாலைகள் உள்ளதால் இளைஞர்கள் அதிகளவானோர் மதுப்பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.
இதன்மூலம் இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தற்கொகொலைக்கு தூண்டப்படுகின்றனர். அதேநேரம் அண்மைக் காலங்களாக இளைஞர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதிகளவான வேலைப்பளு மற்றும் பணமின்மை, வேலைவாய்ப்பின்மை, படித்தும் வேலையில்லாப் பிரச்சனை, பொருட்களின் விலையேற்றம் அதை ஈடுகொடுக்க பணமின்மை போன்ற காரணங்களினால் பல இளைஞர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து காணப்படுகின்றது.
இவ்வாறான மன அழுத்தம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது எதிர்காலம் பற்றிய அக்கறை இன்மை, தூக்கம் இன்மை, நண்பர்கள் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கையற்றிருத்தல், தனிமையை நாடுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே முறையான சிகிச்சையளிக்காவிடின் இது தற்கொலை எண்ணங்களை தோற்றுவிக்கும்.
மேலும் தற்கொலையை தூண்டும் காரணிகளாக மருந்தகங்களில் இலகுவில் அன்டிபயோட்டிக் மருந்துகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றமை மற்றும் கஞ்சா, குடு போன்ற போதைப்பொருட்களின் தொடர்ச்சியான பாவனை ஆகியன மேற்கோள் காட்டப்படுகின்றன. மன அழுத்தத்தின் தீவிர தன்மை யே தற்கொலை எண்ணங்களை தோற்றுவிக் கின்றது.
மன அழுத்தத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிறந்த உளவளத் துணையின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
இல்லையேல் நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சனை, வேலையில்லாப் பிரச்சனை போன்ற காரணங்களினால் இளைஞர்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டப்படும் சந்தர்ப்பங்களுக்கு வழிவகுக்கும்.