யாழில் சுண்ணக்கல் அகழ்வு: அனுர அரசினால் தொடர்ந்தும் தடுத்து நிறுத்தப்படுமா? (வீடியோ இணைப்பு)
அண்மையில் யாழ் குடாநாட்டில் அகழ்ந்தெடுக்கப்படும் சுண்ணக்கல் தொடர்பான செய்திகள் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் சுண்ணக்கல் ஏன் அகழ்ந்திடுக்கப்படுகின்றது சுண்ணக்கல் என்றால் என்ன?
பூகோள பரப்பிலே புவிச்சரிதவியல் காலங்களில் மயோசின் காலகட்ட பரப்பில் தோற்றம் பெற்ற ஒரு நிலவுருவமாக சுண்ணக்கல் நிலவுருவம் விளங்குகின்றது.
இது பூகோள மேற்பரப்பில் காணப்படுகின்ற மூட்டுக்கள், நுண்துளைகள், வெடிப்புக்கள், கொண்ட அடுக்கடுக்கான பாறைப்படைத்தளங்களை கொண்ட சுண்ணக்கல் பிராந்தியத்தினூடாக நகர்ந்து தரைக்கீழ் நீரினையும் தோற்றுவிக்கின்றது.
சுண்ணக்கல் பாறைப்படைத்தளங்களில் உள்ள கல்சியம் போன்ற கார தன்மை உள்ள பதார்த்தங்களில் அமிலமழையானது பொழிகின்றபோது அக்காரத்தன்மை வீழ்ப்படிவுக்கு உள்ளாகி பல்வேறுபட்ட விதமான நிலவுருவங்களை தோற்றம் பெற செய்ய வாய்ப்பாக உள்ளது.
இந்த சுண்ணக் கற்களின் பயன்களாக மண்ணின் அமிலத்தன்மையை குறைக்க விவசாய சுண்ணாம்பாக கால்சியம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. இது மண்ணின் pH மதிப்பை உயர்த்துகிறது. ... தாவரங்களுத் தேவையான மக்னீசியம் மற்றும் கால்சியம் உப்புகளுக்கு இது ஆதார மூலமாகத் திகழ்கிறது மண்ணின் தண்ணீர் ஊடுறுவும் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.
இவ்வாறான நிலையில் உலகளாவிய ரீதியில் சுண்ணக்கல் வளமானது பரப்பி காணப்படும் இடங்களுள் யாழ்குடா நாட்டு பகுதி முக்கியம் பெறுகிறது.
யாழ் குடநாட்டுப் பகுதியில் பெரும்பாலும் காங்கேசன்துறை, சுன்னாகம், மாவிட்டபுரம், கீரிமலை தென்மராட்சி போன்ற கரையோரப் பிரதேசங்களில் கூடுதலாக இந்த சுண்ணக்கல் அதிகளவில் காணப்படுகின்றது.
இச்சுண்ணக்கற்கள் இப்பகுதி மக்களின் மிகப்பெரிய சொத்து என்பதைவிட இது அவர்களின் வளமாகும். இந்த நிலையில் வியாபார நோக்கத்திற்காக இந்த சுண்ணக்கற்கள் அகழப்படுகின்றன. குறிப்பாக காங்கேசன்துறை பகுதியில் அதிகளவில் சுண்ணக்கற்கள் அகழப்படுகின்றன.
யாழ் குடாநாட்டிலுள்ள நீர் வளத்தை சேமிக்க பிரதான அச்சாணியாக சுண்ணக்கல் காணப்படுகின்றது. இது நீரினை தேக்கி வைக்க உதவுகின்றது. இங்கு மழைநீர் மூலம் ஊடுருவும் முழு நிலத்தடி நீரும் நண்ணீராக மாறுகின்றது. கடல் மட்டத்துக்கு கீழே உவர்நீரும் கடல் மட்டத்துக்கு மேலே நன்னீரும் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் சட்டவிரோதமான முறையில் பெருமளவில் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெறுவதால் , நிலத்தடி நீர் உவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சுமார் 4 கிலோமீற்றர் சதுரப்பரப்பளவிற்கும் அதிகமான பிரதேசத்தில் இக்கற்கள் தோண்டியெடுக்கப்படுகின்றன. இப்பிரதேசம் கடலை அண்டியுள்ள நிலையில் கடல்நீர் பிரதேசத்திற்குள் உட்புகும் நிலையிலேயே கடல் மட்டத்தை விட ஆழமாக சுமார் 40 அடி வரை இங்கு பள்ளமாகத் தோண்டி எடுக்கப்பட்டுவதாக தெரிய வருகின்றது. குறித்த சுண்ணக்கல் அகழ்வினால் விவசாய நடவடிக்கைகள், மற்றும் தண்ணீர் ஊற்று குறைவடைகள் கடல் நீர் தரை மட்டத்திற்கு உட்பிரவேசித்தல் போன்ற பல்வேறு பாதிப்புக்கள் உருவாகின்றன.
இவ்வாறான நிலையில் அண்மையில் தென்மராட்சி மீசாலைப் பகுதியில் சுண்ணக் கற்கள் அகழப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டில் அகழப்பட்ட சுண்ணக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையிலேயே இது பேசுபொருள் ஆகியிருக்கின்றது. இதுவரை காலமும் அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் அவர்களின் தலையீட்டிலும் இந்த சுண்ணக் கற்கள் அகழப்பட்டு வந்தன.
இவ்வாறான நிலையில் அனுர அரசாங்கத்தினரால் இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுண்ணக் அகழப்படும் செயற்பாடுகள் தொடர்ந்தும் தடுக்கப்படுமா? இதற்கு முன்னர் சட்ட விரோதமான முறையில் அகழ்வதற்கு துணை நின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா என்ற கேள்வியும் உள்ளது.
இந்த செய்தியை ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்