இன்று தாய் மொழி தினம்! தாய் மொழியாம் தமிழ் மொழியை சந்ததி கடந்து கடத்துவோம் வாரீர்!

தமிழ் மொழியை தன் பெயருடன் கொண்ட வரலாறு தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது.. உலகளாவிய ரீதியில் இன்று பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பிரதேசம், மாவட்டம், மாகாணம், மாநிலம், நாடு, கண்டம் எங்கும் சுமார் 6 ஆயிரம் மாறுபட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
அந்த வகையில் மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்மொழி உண்டு. ஒவ்வொரு தனி நபரும் அவரது தாய்மொழியை போற்றிப் பேணுவதும், அதன் தனித்தன்மையை பாதுகாப்பதும் தலையாய கடமை என்பதையே இந்த சர்வதேச தாய்மொழி தினம் உணர்த்துகிறது.
1952ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி வங்காள மொழியை தேசிய மொழியாக அறிவிக்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் நான்கு பேர், அப்போதைய பாகிஸ்தான் அரசின் அதிரடி நடவடிக்கையால் ஆர்ப்பாட்டத்தின்போது கொல்லப்பட்டனர்.
பல மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தால் பெப்ரவரி 21ஆம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக அனுஷ்டிக்குமாறு 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.
உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று தொடர்புகொள்ள ஊடகமாக இருப்பது மொழியாகும். விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளுக்கும் கூட, உணர்வுகளை பரிமாறிக்கொள்ள ஒவ்வோர் இனத்துக்கும் தனித்தனி மொழிகள் உள்ளன. எனினும், அவற்றின் பாஷைகள் மனிதர்களுக்கு பெரும்பாலும் புரிவதில்லை. மனிதர்களுக்குள்ளும் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள பேசும் மொழிகளில் எத்தனையோ வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உலகில் பேசப்படும் 6 ஆயிரம் மொழிகளில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழானோர் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் 10 ஆயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. எனினும், இவற்றில் எல்லா மொழிகளும் எல்லோருக்கும் புரிவதில்லை.
எனினும், நாம் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள். உலகில் 94 நாடுகளில் கிட்டத்தட்ட 8 கோடி பேர் தமிழ் மொழியை பேசுபவர்களாக உள்ளனர். எனினும், தமிழ் பேசுபவர்கள் வசிக்கும் நாடுகள் அனைத்திலும் தமிழ் அரச மொழியாக அங்கீகாரம் பெறவில்லை. தமிழர்கள் அதிகமாக வாழும் இந்தியாவிலும் தமிழ் அரச மொழியாக்கப்படவில்லை.
ஆனால், இலங்கை தமிழை அரச கரும மொழியாக அங்கீகரிக்கும் நாடு என்ற வகையில் தனிச்சிறப்பு பெறுகிறது. இலங்கையில் மாத்திரமன்றி சிங்கப்பூரிலும் தமிழ் மொழியானது அரச மொழிகளில் ஒன்றாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாம் நமது தாய்மொழியான தமிழின் தனித்துவத்தை, மகத்துவத்தை உணர வேண்டும். தமிழில் பேசுவதை பெருமையாக கருத வேண்டும். தமிழ் பேசுபவர்கள் எத்தனை பிற மொழிகளை பேசத் தெரிந்திருப்பினும், தமிழ் மொழியின் உன்னதத்தை மறந்து, மொழிச் சிதைவு செய்பவர்களாக இருந்தால், அது, தாயை உதாசீனப்படுத்துவதைப் போன்றது என தமிழ்ப் பற்றாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்று பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருவதோடு, பல சாதனைகளை நிலைநாட்டி, தமிழுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். பிற மொழிகளை பேசவேண்டிய சூழ்நிலை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளபோதும், தமிழ் மொழியை பாதுகாத்து, தமிழ்க் கல்வி முறைக்கும் இடமளித்து, வருங்கால சந்ததிக்கும் தமிழுணர்வை கடத்துவோம்.
அந்தவகையில் தாயமொழிலியிலேயே சந்ததியினருக்கு பெயர்களை வைப்போம் தாய் மொழியில் ஒருவரது பெயர் இருப்பது பொதுவான வழக்கம். ஆனால் தாய்மொழியையே ஒருவர் தம் பெயராக வைக்கும் வழக்கம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உண்டு.
தமிழ்மாறன், முத்தமிழ் செல்வி, செந்தமிழ் செல்வன், தமிழரசன் என்ற பெயர்கள் இன்று இயல்பாகவே பலருக்கும் உண்டு. தமிழ் மொழியை பெயராக வைக்கும் இவ்வழக்கம் 1500 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொன்றுதொட்டு இருக்கிறது..
வரலாறு, இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, என்று தொல்லியல் ஆவணங்களாக தமிழ்மொழி ஒருவரின் பெயராக இந்நிலத்தின் பெயராகவே பதிவு செய்யப்படுகிறது. புலவர்கள், ஆன்றோர், சான்றோர், அரசர்கள் மற்றும் பலர் தமிழை தங்கள் பெயரோடு இணைத்துப் பெருமைப்படுகின்றனர். தமிழ் மொழியைத் தன் பெயராகக் கொண்டவர்கள் பட்டியல். கி.பி.5 ஆம் நூற்றாண்டு. காரைக்கால் அம்மையார். மூத்தத் திருப்பதிகங்கள் பாடியவர்.
இவர் தான்பாடிய பாடல்களை செந்தமிழிலால் பாடினேன் என்று சொல்லி தன்னை செந்தமிழ் அம்மை என்று பெயர் சூட்டி அடையாளப்படுத்துகிறார். கி.பி.7 ஆம் நூற்றாண்டு. தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞானசம்பந்தர்.
இவர் தன் பெயராக நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று கையொப்பமிடுகிறார். கி.பி.8 ஆம் நூற்றாண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரம். பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன். இவர் தன்னை தீந்தமிழால் காதுகழுவினேன் என்கிறார்.
மேலும் தன் பெயரை தமிழாபரணன் என்றும் அறிவிக்கிறார்.. தமிழ் மொழியை ஆபரணமாகக் கொண்டவராம்.. ( சின்னமனூர்ச் செப்பேடு ) கி.பி. 9 ஆம் நூற்றாண்டு. தமிழுக்காக தன் உயிரை தானமாகக் கொடுத்த பல்லவன் நந்திவர்மன். ( நந்திக்கலம்பகம்) கி.பி.10 ஆம் நூற்றாண்டு. சோழப் பெருவேந்தர் இராஜராஜச் சோழர்.
தன் பெயரை தண்டமிழ் நாடன் என்று சொல்கிறார். ( திருக்கோவிலூர் கல்வெட்டு) முதலாம் இராஜாதிராஜனுக்கு தமிழ் பரணி கொண்டோன் என்ற பெயர் உண்டு .( vol 5 /607) பாண்டிய மன்னன் வீரபாண்டியனுக்கு அமைச்சராகவும் படைத்தலைவராகவும் இருந்த ஒருவரின் பெயர் தமிழவேள்.( Vol 14/87 ) கி.பி.12 ஆம் நூற்றாண்டு. இரண்டாம் இராஜராஜர் தன்னை முத்தமிழ் தலைவன் என்கிறார். கி.பி.13 ஆம் நூற்றாண்டு. காடவ குல வேந்தர்.
கோப்பெருஞ்சிங்கர். தன்னை தமிழ்நாடு காத்த பெருமான் என்கிறார். மேலும் பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவன் என்றும் கல்வெட்டில் குறிப்பிடுகிறார். 12 ஆம் நூற்றாண்டு. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு இருக்கும் பெயர்..
செழுந்தமிழ் தென்னவன் மற்றும் செந்தமிழ் சுந்தரபாண்டியன். இப்பாண்டியன்தான் கடிகைகளில் தமிழ் பாடம் கற்பிக்க "முத்தமிழ் ஆசிரியரான தமிழ் கரைகண்ட சாத்தனார் " என்பவரை ஆசிரியராக நியமித்து அக்கடிகைக்கு பொய்யாமொழி மங்கலம் என்னும் ஊரை தானமாக அளித்தவர்.
காலம் கி.பி. 1219. குலசேகரபாண்டியனுக்கு முத்தமிழ் கொண்டான் என்னும் பெயர் உண்டு. அரிகுலகேசரி பராக்கிரம பாண்டியனுக்கு , செழியன் தமிழ்நாடன் என்னும் பெயர் உண்டு. இவ்வாறாக..
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



