சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவம்

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை இல்லாத வீடுகள்
கூட இருக்கலாம், ஆனால் சர்க்கரை நோய் இல்லாத வீடுகள் இருப்பது என்பது
கடினம். வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் அதாவது நீரிழிவு நோய்
இருக்கிறது என்கிறது சமீபத்திய தகவல்கள்.
கையில் வெற்றிலை பாக்கு
பெட்டியை வைத்துக்கொண்டு வாய் நிறைய போட்டு மென்று துப்பி ஆரோக்கியமாக
இருந்த காலம் மாறி, சர்க்கரை நோய் மருந்து பெட்டியை தேடி அலையும் காலம்
இன்று நம் கண்முன்னாடி.
காலை ,மதியம், இரவு என்று மூன்று வேளை
மருந்துகள், அதன் பக்க விளைவுகள் தவிர்க்க ஒரு மருந்து, அதற்கு இன்னொரு
மருந்து என்று பெட்டியின் நீளம் நாளுக்குநாள் நீண்டுக்கொண்டே செல்வது
வருத்தமான ஒரு செய்தி. பலருக்கு இதில் அனுபவம் இருக்கும்.
டாக்டர்
எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவே
முடியவில்லை என்பது பலரின் மனக்குமுறல். மறந்துவிட்ட உணவு பழக்கவழக்கமும்,
வாழ்வியல் நெறிமுறைகளும், பாரம்பரிய உணவும் ,மருத்துவ முறைகளுமே இதற்க்கு
முக்கிய காரணம்.
சர்க்கரை நோய் என்றாலே பலருக்கும் அச்சம் தான்.
ஏனெனில் தாய் தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்தால் அடுத்த தலைமுறையினரான
நமக்கும் நிச்சயம் தொடரும் என்பதால் தான். வாழ்நாள் முழுதும் இந்நோய்க்கு
மருந்து சாப்பிடணும். அறுசுவைகளில் நமக்கு பிடித்த சுவையான இனிப்பு சுவையை
முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பிறந்ததில் இருந்து உண்டு
பழக்கமாகிவிட்ட அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் 10
ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை வியாதி நீடித்தால் பல்வேறு உள்ளுறுப்புகளை
பாதிக்கும். பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
அதன் பின் கணையத்தில்
இன்சுலின் சுரப்பு முற்றிலும் தடைபட்டு இன்சுலின் மருந்து தான்
எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்படும் போன்ற நோயினை சார்ந்த பல்வேறு
கருத்துக்கள் சர்க்கரை வியாதி எனும் தொற்றா நோயை புற்று நோய் அளவிற்கு
நம்மை பயம்காட்டி நாள்தோறும் பலரை வருத்தமடைய செய்கிறது என்பது தான் உண்மை.
அதனால் தான் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை நாடுவோர் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர் .
அறுசுவைகளில்
அதிகம் நாம் பயன்படுத்த மறந்த சுவை கசப்பு. இனிப்புக்கு எதிர் சுவை
கசப்பு. அதாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறைக்கும் தன்மை இந்த கசப்பு
உள்ளது. இனிப்பு சுவையை அதிகம் கொண்டாடும் நாம் கசப்பு சுவையுள்ள பொருள்களை
மறந்ததாலே இந்த சர்க்கரை நோய் போன்ற பல தொற்றா நோய்கள் நம்மை வதைக்கின்றன.
கசப்பு என்றாலே நம் நினைவுக்கு வருவது பாகற்காய் தான். பலரின்
வருத்தத்தை போக்கும் வகையில் காலம்காலமாக பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த
சித்த மருத்துவ மூலிகையான பாகற்காய் பற்றி அனைவரும் அறிந்துகொள்வது
அவசியமான ஒன்று.
பாகற்காயில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள் பல்வேறு
மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளன. குடலில் உள்ள புழுக்களை கொல்லும் தன்மை
உடையது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும் உடையது. மேலும்
பல்வேறு நுண்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது. சர்க்கரை
நோய்க்கு மட்டுமல்லாது பல மருத்துவ குணங்கள் வாய்ந்ததால் அடிக்கடி உணவில்
சேர்த்துக்கொள்வது நல்லது.
பாகற்காயில் உள்ள குக்கர்பிட்டேன் வகையான
கிளைக்கோசைடுகள் நம் உடலில் உள்ள இன்சுலின் ரிசப்டர்களுடன் இன்சுலின் போல
இணைந்து செயல்பட்டு சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையன.
மேலும்
இது சர்க்கரை உள்கிரகித்தலை அதிகரித்து சர்க்கரை அளவை ரத்தத்தில்
குறைக்கும் தன்மை உடையன. பாகற்காயில் உள்ள கரண்ஷியா, பாலிபெப்டைட்-பி
மற்றும் விஸின் ஆகிய மூன்று முக்கிய வேதிப்பொருள்கள் இரத்தச் சர்க்கரையைக்
குறைக்கும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது .
பாலிபெப்டைடு -பி
அல்லது பி -இன்சுலின் என்று கருதப்படும் இந்த வேதிப்பொருள் நம் உடலில்
இன்சுலின் போல செயல்பட்டு சர்க்கரை அளவை குறைக்க உதவும் . ஆகவே இந்த
பாலிபெப்டைடு -பி உள்ள பாகற்காய் இன்சுலின் போட்டுக்கொள்ளும் முதல் வகை
நீரிழிவு நோய் உள்ள அதாவது டைப்-1 டயாபடீஸ் உள்ளவர்களும் பயன்படுத்தி
வந்தால் நிச்சயம் நல்ல பலன் தரும்.
மேலும் கணையத்தில் உள்ள பீட்டா
செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பினை வெளிப்படுத்தும் தன்மையும் உடையது.
இதனால் பீட்டா செல்கள் புத்துணர்ச்சிபெறும் என்பதும் அறிவியல் கூறும் உண்மை
.
சர்க்கரை வந்தாலே எல்லா நோய்களும் வந்துவிடும். ஏனெனில்
ரத்தத்தில் கட்டுக்குள் வராத சர்க்கரை அளவால் உடலில் உள்ளுறுப்புகள்
பாதிப்பு அதிகம் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பாகற்காயால்
சர்க்கரை அளவு குறைவதுடன் அதன் வேதிப்பொருள்களுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்
செய்கையும் இருப்பதால் உள்உறுப்புகள் பாதிப்பை தடுக்க முடியும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



