பட்டலந்த வதை முகாம்: முன்னாள் இராணுவ அதிகாரி அம்பலப்படுத்திய திடுக்கிடும் தகவல்

கடந்த 1994 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு அமைய பட்டலந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதையடுத்து 1988, 1989 ஆம் ஆண்டுகளில் பட்டலந்த வீட்டுத் தொகுதியில் நடத்திச்செல்லப்பட்ட வதைமுகாம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியது.
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் தப்பியவர்கள் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளை ஆணைக்குழு முன்னிலையில் அடையாளப்படுத்தினர். அந்த தகவல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
வீட்டுத் தொகுதியின் A2/2 வீட்டை 1983 முதல் 1989 வரை ரணில் விக்கிரமசிங்க இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சின் சுற்றுலா பங்களாவாக பயன்படுத்தியிருந்தார். பின்னர் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 1994 ஆம் ஆண்டு வரை அதேவீட்டை கைத்தொழில் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்தினார்.
A2/1 வீடு ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்ததுடன் A2/3 வீடு ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இருந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.
அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் பங்களா பொறுப்பாளராக சேவையாற்றிய வின்சன் பெர்னாண்டோ என்பவர் குறித்த வீட்டில் தங்கியிருந்ததுடன், ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்தார். A1/7 வீட்டையும் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்தியிருந்ததுடன் B2 வீட்டையும் ரணில் விக்கிரமசிங்க தமது அலுவலகமாக பயன்படுத்தியிருந்தார். இந்த வீட்டில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தப்பிச் சென்ற ஒருவர் ஆணைக்குழு முன்னிலையில் இந்த வீட்டை அடையாளம் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
B1 வீடும் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் பயன்படுத்தப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுதாத் சந்திரசேகர B7 வீட்டை பயன்படுத்தியிருந்ததாக பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. B8 வீடு குறித்த வீட்டிற்கு அருகில் அமைந்திருந்ததுடன் அதனை பொலிஸ் அத்தியக்சகர் டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்தியிருந்தனர்.
குறித்த வீட்டில் தடுத்து வைக்கப்பட்டு தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக ஏல் சுகி பெரேரா என்பவர் பட்டலந்த விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். இதனைத் தவிர உரிய நடைமுறைக்கு புறம்பாக அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உத்தரவுக்கு அமைய பொலிஸ் பிரிவொன்றுக்காக மேலும் சில வீடுகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் முன்னாள் இராணுவ அதிகாரியான இங்ரானந்த டீ.சில்வா பட்டலந்தவில் என்ன நடந்தது என்பது தொடர்பாக வெளிக்கொணர்ந்தார். நான் இராணுவ பொலிஸின் முன்னாள் நிழற்பட கலைஞராக இருந்தேன். வதைமுகாங்களுக்கு சென்று நிழற்படம் பிடிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது.
கொலை செய்யப்பட்ட அனைவரது நிழற்படங்களையும் எடுத்து DOC யினால் அல்பம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. இவரை தெரியுமா என அடையாளம் காண்பிக்குமாறு அந்த அல்பம் சந்தேக நபர்களிடம் காண்பிக்கப்பட்டது. அந்த அல்பத்தை தயாரிப்பதற்காக எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்னவென்றால் வதைமுகாம்களில் கொலை செய்யப்பட்டவர்களை கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் நிழற்படம் எடுக்க வேண்டும்.
இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் விதத்தை குறித்துக்கொண்டு அந்த சித்திரவதையை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். அத்தகைய நபர் பிற்காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியானார். பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் தாம் அறிந்த அனைத்தையும் வெளிப்பிடுத்தியவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறினர். அது தற்கொலை அல்ல என்பதை நாம் அறிவோம். டக்ளஸ் பீரிஸ் போன்றவர்கள் இவற்றை வெளிப்படுத்த முயன்றபோது என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.
நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய வியஜதாச லியனதாச ஆராய்ச்சி தோழரை பட்டலந்த வதைமுகாமுக்கு கொண்டு வந்தனர். அவரை தங்காலையில் இருந்த தங்காலை SSP இன் வீட்டில் வைத்திருந்தனர். பின்னர் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்து பட்டலந்தவிற்கு கொண்டு வந்தனர். அன்று சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.
அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரை நீதிமன்றில் முன்னிலையாகப்போவதில்லை என தெரிவித்து ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். இதனால் பட்டலந்தவில் சித்திரவதைக்குட்படுத்திய தோழர் வியஜதாச லியனாராய்ச்சியை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய நிலை ரணில் உள்ளிட்டவர்களுக்கு ஏற்பட்டது.
அன்றைய தினமே அவர் உயிரிழந்தார்.
அவரது பிரேத பரிசோதனையில் என்ன வெளிவந்தது. 19 எலும்பு மூட்டுக்கள் உடைந்திருந்தன 307 காயங்கள் ஏற்பட்டிருந்தன.
ஏழைகளுக்காக இலவசமாக நீதிமன்றில் வாதாடிய தோழர் யஜதாச லியனாராய்ச்சியை பட்டலந்த வதை முகாமில் தாக்கி மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்த விதமே இதில் இருந்தது எனவும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



