ட்ரம்பின் வரி உயர்வால் ஆடைகள் மற்றும் மின்சாதனப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

“விடுதலை நாள்” உரையின் போது, “வேலைவாய்ப்புகளும் தொழிற்சாலைகளும் அமெரிக்காவுக்குத் திரும்பும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், பெருமையாக தெரிவித்தார்.
இதனைக் தொடர்ந்து உலகளாவிய அளவில் மிகப்பெரிய வரித்தடைகளை அமுல்படுத்தியுள்ளார்.
இந்த வரி உயர்வுகள் காரணமாக, ஆடைகள் முதல் எலக்ட்ரானிக் சாதனங்கள் வரை பல தயாரிப்புகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், அதற்கான சுமையை பெரும்பாலும் அமெரிக்க நுகர்வோர்களே ஏற்க வேண்டியதாக இருக்கும்.
அமெரிக்காவில் ஐஃபோன்கள் தயாரிக்கப்படும் என்றால் அதன் விலை $3,500 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தொழில்நுட்ப நிபுணர் டான் ஐவ்ஸ் எச்சரித்துள்ளார். தற்போது ஒரு ஐஃபோனின் சராசரி விலை சுமார் $1,000 ஆக உள்ளது.
ஆனால் அமெரிக்காவில் அதற்கான தொழில்நுட்ப உற்பத்தி அமைப்பை உருவாக்க வேண்டுமெனில், செலவுகள் மூன்றரை மடங்கு ஆகும் என அவர் கூறியுள்ளார்.
“அமெரிக்காவில் ஒரு தொழிற்சாலை அமைத்து அதை மேற்கொள்ள வேண்டுமானால், ஒரு ஐஃபோனின் விலை 3,500 டொலர்களாகும்,” என வெட்புஷ் சிக்கியுரிடிஸ் Wedbush Securities நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப ஆராய்ச்சி தலைவர் டான் ஐவ்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது உற்பத்தித் தேவைமிக்க 10% விநியோக சங்கிலியை மட்டுமே அமெரிக்காவிற்கு மாற்ற, ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் 30 பில்லியன் டொலர் செலவாகும் மற்றும் 3 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அவர் கூறினார். சீனா மற்றும் தைவானில் ஆப்பிளின் உற்பத்தி மையங்கள் பெரிதும் அமைந்துள்ளதால், வரி உயர்வுகள் அதன் பங்கு மதிப்பை 25% வரை குறைத்துள்ளன.
“இந்த வரி புயலில் நேரடியாகப் பாதிக்கப்படும் நிறுவனங்களில் ஆப்பிள் மிகவும் முக்கியமானது,” எனவும் அவர் கூறினார். இதற்கிடையில், ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை சீனாவிலிருந்து வேறு நாடுகளுக்கு மாற்றும் முயற்சியாக, அமெரிக்காவில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் 500 பில்லியன் டொலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
விரைவில் ஐஃபோன்களின் விலை மேலும் உயரும் என தொழில்நுட்ப நிபுணர்கள் நம்புகின்றனர். Rosenblatt Securities நிறுவனம், இந்த வரி உயர்வுகளை நுகர்வோர்களிடம் நேரடியாக மாற்றினால், ஐஃபோன் விலை 43% அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தி நடைபெறும் இடத்தைப் பொருத்து, விலை சுமார் 30% அதிகரிக்கலாம் என Counterpoint Research நிறுவனத்தின் நெயில் ஷா, தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உற்பத்தியை விரிவாக்குவதற்கான திட்டங்களையும் ஆப்பிள் பரிசீலித்து வருகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



