காசாவில் அடுத்த இரண்டு நாட்களில் 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது.
இந்நிலையில் நேற்று கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளின் அழுத்தத்தின் கீழ், குறைந்த அளவிலான உதவிப்பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.
இந்நிலையில் பிபிசி ரேடியோ 4 க்கு அளித்த பேட்டியில் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் பேசுகையில், திங்களன்று ஐந்து லாரிகள் நிறைய மனிதாபிமான உதவிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்தன, அதில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் அடங்கும். இஸ்ரேலிய முற்றுகையின் பல வாரங்களுக்குப் பிறகு, இந்த உதவி கடலில் ஒரு துளி போன்றது.
இந்த சிறிய அளவிலான உதவி கூட இன்னும் தேவைப்படுபவர்களை சென்றடையவில்லை. நாங்கள் அவர்களை அடையவில்லை என்றால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கும் உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், இஸ்ரேல் உதவியைத் தடுத்ததையும், பாலஸ்தீனியர்களை பெருமளவில் வெளியேற்ற இஸ்ரேலின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
இதை குறிப்பிட்டு பேசிய டாம் பிளெட்சர், சர்வதேச சமூகம் தனது நிலைப்பாட்டை கடுமையாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றார். மேலும் இன்று காசாவிற்கு குழந்தை உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை மேலும் 100 லாரிகளில் வழங்க ஐ.நா எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



