உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள்!

பட்டினியின் பிடியில் வாடும் பாலஸ்தீனியர்கள் உணவு விநியோகிக்கப்படும் நிலையத்தில் பெருமளவில் திரண்டதையடுத்து காசாவில் அமெரிக்கா ஆதரவுடனான புதிய குழுவின் மனிதாபிமான உதவி வழங்கும் நடவடிக்கைகள் பெரும் குழப்பத்திற்குள் சிக்கியுள்ளதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
உணவு விநியோகிக்கப்படும் பகுதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு பெருமளவு பாலஸ்தீனியர்கள் நுழைந்ததை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என ஏபி தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் துப்பாக்கி சூட்டு சத்தத்தையும் கேட்க முடிந்ததாக தெரிவித்துள்ள ஏபி செய்தியாளர் ஹெலிக்கொப்டரில் இருந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியில் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய படையினர் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளனர். மூன்று பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் ஒருவரின் காலில் இருந்து குருதி வெளியேறுகின்றது என ஏபி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காசாவின் தென்பகுதயில் உள்ள ரபாவில் காசா மனிதாபிமான மன்றம் என்ற அமைப்பு மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இந்த முறை மூலம் காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்து ஐநாவும் ஏனைய சர்வதேச அமைப்புகளும் இதனை ஏற்க மறுத்துள்ளன. பொதுமக்களிற்கான உணவை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இது அனுமதிக்கின்றது என ஐநாவும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
மனிதாபிமான பொருட்களை எதிர்பாத்திருக்கும் மக்களிற்கும் இஸ்ரேலிய துருப்பினருக்கும் இடையில் மோதல் வெடிக்கலாம் என சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. மூன்று மாதகால இஸ்ரேலின் தடை காரணமாக பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள காசா மக்கள் உணவிற்காக காத்திருக்கின்றனர். பெருமளவானவர்கள் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு செவ்வாய்கிழமை சென்று உணவுப்பெட்டிகளை பெற்றுக்கொண்டனர் என பாலஸ்தீனியர்கள் ஏபிக்கு தெரிவித்துள்ளனர்.
தகவல் பரவியதும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் தங்களின் அகதிமுகாமிலிருந்து பல மைல் நடந்து மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியை நோக்கி சென்றனர். அவர்கள் இஸ்ரேலின் இராணுவநிலைகள் ஊடாகவே அந்த இடத்தை சென்றடையவேண்டும். மதியமளவில் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணப்பட்டனர்.நீண்ட சங்கிலிதொடர் வேலிப்பாதைகளில் பெருமளவில் மக்கள் குவிந்திருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொருவரும் சோதனை செய்யப்பட்டு முக அடையாளங்கள் ஸ்கான் செய்யப்பட்ட பின்னர் உணவுபெட்டிகளை பெற அனுமதிக்கின்றனர் என ஏபிக்குதெரிவித்துள்ள இருவர்,கூட்டம் அதிகரித்ததும்,மக்கள் வேலிகளை இழுத்துவிழுத்திவிட்டு உணவுப்பெட்டிகளை எடுத்தனர்,அங்கிருந்த பணியாளர்கள் தப்பியோட வேண்டிய நிலையேற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



