AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும்!
AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் தெரிவித்துள்ளார்.
Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேலும் தெரிவிக்கையில்,
Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம் உருவாக்கப்பட்டது. இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் (Association of Natural Disaster Risk Management Professionals) சங்கமானது, அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுடன் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் ஏற்படும் அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், அவர்களை தயார்ப்படுத்தவும் முடியும். இதனால் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போதான உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும். இந்த திட்டமானது, இலங்கையின் தொழில்நுட்பம் சார்ந்த அனர்த்த தாங்கும் திறன் செயல்முறையை பிரதிபலிக்கிறது.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்ததுடன், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. எனவே தொழில்நுட்பங்களின் உதவியுடன் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிந்து உயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டமானது சிறந்ததொரு முயற்சியாகும்.
இந்த திட்டமானது இலங்கையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகவும் பங்களிப்பு வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. Geo செயற்கை நுண்ணறிவானது அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் பாரிய சவால்களை முறிப்பதற்கு இந்த திட்டம் மிகவும் உதவும் என்று நாம் நம்புகிறோம்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க தூதரகம் வழங்கும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல், இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
