இந்திய நிறுவனத்தின் தடுப்பூசிகளை இலங்கை மருத்துவமனைகளில் பயன்படுத்த தடை!
ஒன்டான்செட்ரான் (Ondansetron) தடுப்பூசியை தயாரித்த இந்தியாவின் மான் பார்மாட்டிகல்ஸ் தனியார் நிறுவனத்தின், அனைத்து தடுப்பூசிகளையும் இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்துவதை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை, தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.
குறித்த தடுப்பூசி தயாரிப்பில் ஏற்பட்ட தவறினால் சில சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர், ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியில் ஒருவகை கிருமி இருப்பதாக பல மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவை பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 'ஒன்டான்செட்ரான்' தடுப்பூசி குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தெரிவித்துள்ளார். ஒன்டான்செட்ரான் என்பது வாந்தி போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியாகும்.
இது நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், கடந்த 12ஆம் திகதி ஒன்டான்செட்ரான் எனப்படும் தடுப்பூசியின் நான்கு தொகுதிகளையும் பாவனையிலிருந்து உடனடியாக நீக்குமாறு மருந்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை பணிப்புரை விடுத்திருந்தது.
குறிப்பாக, தடுப்பூசியில் சிக்கல்கள் இருப்பதாக கிடைத்த தகவல்களுக்கு அமைய, கண்டி தேசிய மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறை நடத்திய ஆய்வில், தடுப்பூசியின் மாதிரியில் சந்தேகிக்கப்படும் நோய்க்கிருமி இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து தடுப்பூசியை இடைநிறுத்த பணிப்புரை விடுக்கப்பட்டது.
முன்னதாக, கண்டி தேசிய மருத்துவமனையின் நோயாளிகள் பலருக்கு, இந்தத் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்தே, குறித்த தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது தொடர்பான முதற்கட்ட அறிக்கைகள் வேறு பல மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்டதாகவும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய தடுப்பூசிகளில் சுமார் 270,000 தடுப்பூசிகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், கடந்த 12 ஆம் திகதி முதல் மருத்துவமனைகளிலிருந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தடுப்பூசிகள் மருத்துவமனைகளிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு சுமார் 220,000 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
