நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!
கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த போகத்தில் சேகரிக்கப்பட்ட நெல்லை லங்கா சதொச விற்பனை வலையமைப்பு மற்றும் ஏனைய பெயரிடப்பட்ட விற்பனை வலையமைப்புகளுக்கு விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு முறை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை, இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், குறிப்பாகப் பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்களையும் இதில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து 'நாடு' (Nadu) அரிசி மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும் என்றும், அவ்வாறு பெறப்படும் நாடு நெல் 125 ரூபாய் என்ற பரிந்துரைக்கப்பட்ட விலையில் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை பிராந்திய அலுவலகங்கள், சதொச தலைமை அலுவலகம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்கள் இதற்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜனவரி மாதம் 05ஆம் திகதி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.