நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: சீனாவிடம் கோரிக்கை முன்வைப்பு
சீனாவின் நன்கொடையாக நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவுவது குறித்து அவதானம் செலுத்துமாறு அமைச்சர் விஜித ஹேரத் சீன அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளார்.
சீனா உள்ளிட்ட உலகளாவிய வாகனச் சந்தையிலிருந்து இலங்கை அதிகளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முனைந்துள்ளதால், அமைச்சர் விஜித ஹேரத் இந்த முன்மொழிவை மேற்கொண்டுள்ளார்.
நேற்று (29) முற்பகல் வெளிவிவகார அமைச்சில் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் உடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவை சாதகமாக ஏற்றுக்கொண்ட சீனத் தூதுவர், இது குறித்து சீன அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதாக இணக்கம் தெரிவித்தார். எதிர்காலத்தில் அதிகளவிலான மின்சாரப் பேருந்துகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக அமையும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை மீளப் புனரமைக்க சீன அரசாங்கத்தின் உடனடி உதவியை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கை குறித்து உடனடியாக சீன அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல சீனத் தூதுவர் தமது உடன்பாட்டை வௌியிட்டுள்ளார்.