தையிட்டி விஹாரை சட்டவிரோதம் என தீர்ப்பளித்தால் ஏற்க தயார்! தேரர் உறுதி

#SriLanka
Mayoorikka
1 hour ago
தையிட்டி விஹாரை சட்டவிரோதம் என தீர்ப்பளித்தால் ஏற்க தயார்!  தேரர் உறுதி

யாழ்ப்பாணம் - தையிட்டி விஹாரைப் பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படும் வரையில், விஹாரை வளாகத்திற்குள் எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விஹாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.

 தையிட்டி விகாரையில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் விகாரையில் வழமையான பூஜை வழிபாடுகள் மாத்திரமே நடைபெறும், அன்றைய தினம் எவ்வித விசேட பூஜைகளுக்கும் தாம் இடமளிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

 தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுவதாகவும், விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் பரவும் செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், அத்தகைய நிகழ்வுகளுக்குத் தாம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்றும், அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 அத்துடன், விஹாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பான சர்ச்சையை விசாரிக்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவிடம் விஹாரைக்குரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 அதேபோன்று, காணிக்கு உரிமை கோருபவர்களும் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரத்தில் இது ஒரு சட்டவிரோதமான செயல் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அதனை ஏற்க நான் தயாராக உள்ளதாகவும் விஹாராதிபதி இதன்போது தெரிவித்தார்.

 இந்தநிலையில் அரசாங்கக் குழுவின் விசாரணைகளுக்கு மதிப்பளித்து, இறுதி முடிவு எட்டப்படும் வரை விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என அவர் வலியுறுத்தினார்.

 காணி விடுவிப்புத் தொடர்பாக இதுவரை எவரும் தன்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றும், தற்போது அரசாங்கக் குழுவின் விசாரணைகளே நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!