சுவிட்சர்லாந்து விடுதியில் தீப்பரவல் சம்பவம்: தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரிய தீப்பரவல் ஏற்பட்டது.
மதுபான போத்தல்களில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மெழுகுவர்த்திகள் கூரையில் பட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கோரமான சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த விடுதியின் கட்டிட பாதுகாப்பு விதிகள், வெளியேறும் வழிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜனவரி 9 அன்று அந்நாட்டில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது.