ஆன்மீக அன்னை சிவத்தமிழ்ச் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டியின் 101 ஆவது பிறந்தநாள் இன்று!

#SriLanka #Jaffna
Mayoorikka
23 hours ago
ஆன்மீக அன்னை சிவத்தமிழ்ச் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டியின் 101 ஆவது பிறந்தநாள் இன்று!

ஈழத்தின் ஆன்மீக அன்னை சிவத்தமிழ்ச் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டியின் 101 ஆவது பிறந்தநாள் இன்று ஆகும்.

 ஈழத்தின் அருஞ்சைவ நற்பணிச் செம்மல், 'சிவத்தமிழ்ச்செல்வி', 'பண்டிதை' அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய, ஏழை மக்களுக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கும் சிறுவர் இல்லங்களை அமைத்து சேவையாற்றி வந்த பெருந்தகை ஆவார். 

 யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக செயற்பட்டவரும், சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளருமான இவர் 1925 ஜனவரி 7ஆம் திகதி யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் அப்பாக்குட்டி - தையற்பிள்ளை தம்பதிக்கு மகளாக பிறந்தார். 

 தங்கம்மா 1929ஆம் ஆண்டு மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் இடைநிலைக் கல்வியையும் தொடர்ந்தார். 1940இல் க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்தார். 

1941இல் சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்றார். 1946ஆம் ஆண்டு மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

 அதனைத் தொடர்ந்து, 1949ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியராக கடமைகளை ஆரம்பித்தார். தமிழையும் சைவ சமயத்தையும் நன்கு கற்று, 1952இல் பாலபண்டிதராக தேர்வடைந்த இவர், 1958இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். 

 இறுதியாக, இவர் ஆசிரியப் பணியேற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 12 ஆண்டுகளாக கடமையாற்றிவிட்டு, 1976இல் ஓய்வு பெற்றார். 31 ஆண்டுகளாக ஆசிரியை பணியில் ஈடுபட்ட தங்கம்மா அப்பாக்குட்டி யாழ்ப்பாணத்தில் இறைவழிபாட்டை மேம்படுத்தும் நோக்கில் சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். 

 1950/60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல நிகழ்ச்சிகளினூடாக சமய சொற்பொழிவுகள் செய்து, சமயப்பணி ஆற்றினார். இந்தியா, தமிழ்நாட்டின் சிதம்பரம் திருத்தலத்திலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் 1965ஆம் ஆண்டு உரையாற்றியமை இவரது வாழ்க்கை வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் ஆகும். 

 திருத்தலப் பணி 

 தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலம் ஆரம்ப காலகட்டத்தில் பொது மக்களின் கவனத்தை பெறாதிருந்தது. எனினும், 70களில் அந்த ஆலயத்தை கட்டியெழுப்பி, ஆலயத் திருப்பணியோடு சமூக சேவையாற்றி வந்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி. 1977இல் அக்கோயிலின் நிர்வாகத் தனாதிகாரியாக நியமிக்கப்பட்டார். 

 தனது பதவிக்காலத்தில் ஆலயத்தின் இராஜ கோபுரம், சித்திரத் தேர், மண்டபங்கள், அறச்சாலைகள், நந்தவனம், தீர்த்தத் தடாகம் போன்ற அமைப்புகளை மிக நேர்த்தியாக கட்டுவித்து, அதனூடாக மக்கள் பணி செய்து வந்தார். 

 அத்தோடு, ஆலய வளாகத்தில் 'துர்க்காபுரம் மகளிர் இல்லம்' என்ற சிறுவர் இல்லமொன்றை நிறுவி, அதனூடாக ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்தார். அத்தோடு, ஏழைகளின் பசியை போக்க 'அன்னபூரணி அன்னதான மண்டபம்', திருமண சுப காரியங்களை நிகழ கல்யாண மண்டபமும் அமைப்பித்தார். 

 அது மட்டுமன்றி, 'சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம்', நல்லூரில் துர்க்கா தேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்து சமய சமூகத் தொண்டுகள் பலவற்றை நிறைவேற்றினார்.

 இலக்கியப் பணி ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலில் சிறப்புச் சொற்பொழிவாற்றியதால் 'சிவத்தமிழ்ச் செல்வி' என்றும், 'திருவாசகக் கொண்டல்', 'செஞ்சொற் செம்மணி', 'சிவஞான வித்தகி', 'துர்க்கா புரந்தரி' போன்ற 15க்கும் மேற்பட்ட சிறப்பு பெயர்களாலும் அழைக்கப்படுபவர், தங்கம்மா அப்பாக்குட்டி. 

 இவர் சமயத்துக்கு மாத்திரமன்றி, தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பல. அதற்கு இவர் வெளியிட்ட நூல்களே சான்றுகள். இவரது கந்தபுராண சொற்பொழிவு நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. அத்தோடு, இவர் எழுதி வெளியிட்ட 'பெண்மைக்கு இணையுண்டோ?' (2004), 'வாழும் வழி' (2002) போன்ற நூல்கள் பெரிதும் பேசப்பட்டவை. 

 விருதுகள்: 

 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதினை அமெரிக்கா ஹவாய் சிவாய சுப்ரமணியசுவாமி ஆசிரமம் இவருக்கு வழங்கி கெளரவித்தது. அது தவிர, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 1998இல் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியது. மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் விருது, இலங்கை அரசினால் 'கலாசூரி' பட்டம் என பலதரப்பு அங்கீகாரங்களையும் பெற்று சிறப்பிக்கப்பட்டார். 

 இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட தங்கம்மா அப்பாக்குட்டி உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 2008 ஜூன் 15ஆம் திகதி மண்ணுலக வாழ்வை துறந்தார்.

 "சைவமும் தமிழும் வாழும் வரை சிவத்தமிழ்ச்செல்வி ஆன்மிக உலகுக்கு ஆற்றிய திருப்பணியும் அவரின் திருநாமமும் என்றும் வாழும்"

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!