தொடரும் மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை.
நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று(26) காலை 8.00 மணி முதல் ஈடுபட்டுள்ளது.
இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலுள்ள வைத்தியர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐந்து விடயங்களை உள்ளடக்கி இந்த தொழிற்சங்கப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. அதற்கமைய, 01.கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) இல்லாத மருந்துகளை, வெளி மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை (பரிந்துரைச் சீட்டு) வழங்காமை.
02.வைத்தியசாலை அமைப்பிற்குள் இல்லாத ஆய்வுகூட பரிசோதனைகளை, வெளி ஆய்வுகூடங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் செய்துகொள்வதற்காக துண்டுச் சீட்டுகள் அல்லது பரிந்துரைகளை வழங்காமை.
03.தற்போது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை வழங்க முடியாவிடின் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படாதவிடத்து, வைத்தியசாலை அமைப்பிற்குள் புதிய பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமை.
04.சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் நடத்தப்படும் சில கிளினிக்குகள் மற்றும் சுகாதார முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமை.
05.ஏதேனும் ஒரு வைத்தியசாலையில், கிளினிக்கில் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளியை பரிசோதிக்கும் போது வைத்தியருக்கு உதவியாக, உதவி உத்தியோகத்தர் ஒருவரை வழங்காவிடின் வைத்தியர்கள் அந்த இடங்களில் கடமையிலிருந்து விலகுதல்.
ஆகிய 05 வழிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளிகள் பெரும் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்