மத்திய கிழக்கில் போர்: சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 600 மில்லியன் டொலர் இழப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்தப் பிராந்தியத்தின் சுற்றுலா மற்றும் பயணத்துறை நாளொன்றுக்கு சுமார் 600 மில்லியன் டொலர் (இலங்கை ரூபாயில் சுமார் 180 பில்லியன்) இழப்பைச் சந்தித்து வருவதாக உலக சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான பேரவை (WTTC) மதிப்பீடு செய்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து சீர்குலைந்துள்ளதால், சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகள் இந்த பாரிய வருமான இழப்பை எதிர்கொள்கின்றன. பிராந்தியத்தின் வான்பரப்பின் பெரும்பகுதி மூடப்பட்டுள்ள நிலையில், மிகக் குறைந்த அளவிலான வர்த்தக விமானங்களே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன. போர் ஆரம்பமாவதற்கு முன்னர், 2026 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கிற்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஊடாக 207 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என WTTC கணித்திருந்தது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள WTTC இன் தலைவர் கிளோரியா குவேரா, "சுற்றுலாத்துறை விரைவாக மீண்டெழக்கூடிய ஒரு துறையாகும்.
பாதுகாப்பு தொடர்பான நெருக்கடிகளின் போது, அரசாங்கங்களும் தனியார் துறையினரும் இணைந்து செயற்பட்டால் இரண்டு மாதங்களுக்குள்ளேயே சுற்றுலாத்துறையை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போதைய பதற்றமான சூழலால் பல சர்வதேச நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
குறிப்பாக, டச்சு நாட்டு விமான சேவையான KLM மார்ச் 28 ஆம் திகதி வரை டுபாய்க்கான தனது சேவைகளை இரத்து செய்துள்ளது.
இதேபோன்ற முடிவை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனமும் எடுத்துள்ளது.
இந்த போர்ச் சூழலால் மத்திய கிழக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் சுற்றுலாத்துறை தற்போது பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.
(வீடியோ இங்கே )