லெபனானில் உருவாகும் பாரிய மனிதாபிமானப் பேரழிவு - உலக நாடுகள் கவலை!!
இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான் தற்போது ஒரு பாரிய மனிதாபிமான பேரழிவை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக அல்ஜசீரா செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகரித்ததில் இருந்து, லெபனானில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு லெபனான், பெக்கா பள்ளத்தாக்கு, தலைநகர் பெய்ரூட் மற்றும் வடக்கு லெபனான் வரை அனைத்துப் பகுதி மக்களும் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகவராண்மையின் (UNHCR) லெபனான் பிரதிநிதி கரோலினா லிண்டஹோம் பிலின், ஜெனீவாவில் நடைபெற்ற கலந்துரையாடலில் பின்வருமாறு தெரிவித்தார்.
"லெபனானின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஒரு மனிதாபிமான பேரழிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.
மக்கள் கூட்டாக தங்கும் முகாம்களில் பாதுகாப்பைத் தேடி அலைகின்றனர்." கடந்த வாரம் மத்திய பெய்ரூட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களால், சன நெரிசல் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக, இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் மன அழுத்தமும் அச்சமும் காணப்படுவதாக கரோலினா சுட்டிக்காட்டியுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஐக்கிய நாடுகள் சபை கடுமையாகப் போராடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்