60 ஆண்டு காலக் காதல் 86 வயதில் கைவிலங்கு: அமெரிக்காவில் பிரான்ஸ் மூதாட்டிக்கு நேர்ந்த கதி!
#France
#America
Lakhi
2 hours ago
60 வருடம் கழித்து சேர்ந்த காதல்.. கணவன் இறந்தவுடன் துரத்தும் அமெரிக்காவின் ட்ரம்ப்! பிரான்ஸ் மூதாட்டியின் சோகக் கதை. 1960-களில் திருமணம் முடிக்க முடியாமல் போன தனது காதலனை,80 வயதில் கரம் பிடித்து அமெரிக்கா சென்ற 86 வயதுடைய பிரான்ஸைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர், தற்போது விசா விதிமுறைகளை மீறியதாகக் கூறி அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சின் நாந்தேஸ் (Nantes) நகரைச் சேர்ந்த மேரி-தெரேசா (Marie-Thérèse), 1960களில் நேட்டோ தளத்தில் பணியாற்றிய அமெரிக்க வீரரான பில்லி (Billy) என்பவரைக் காதலித்தார். எனினும்,1966 ஆம் ஆண்டில் பில்லி, அமெரிக்கா திரும்பியதும் இருவரும் தொடர்பை இழந்தனர். இருவருக்கும் தனித்தனியே திருமணமாகி பிள்ளைகளும் பிறந்தனர்.
சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு 2010 ஆம் ஆண்டு மீண்டும் அவர்கள் இருவரும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் அவர்கள் இருவரும், 2022 ஆம் ஆண்டு தத்தமது துணைகளை இழந்த நிலையில் மீண்டும் வாழ்க்கையில் இணைய முடிவெடுத்தனர். இதனையடுத்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட மேரி, தனது காதலனுடன் வாழ அமெரிக்கா சென்றார். கடந்த ஜூன் மாதம் 90 நாள் விசா மூலம் அமெரிக்கா சென்ற அவர். அங்கு நிரந்தர வதிவிட அனுமதிக்கு (Green Card) விண்ணப்பித்திருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, 2026 ஜனவரி மாதம் பில்லி திடீரென காலமானார். இதனால் மேரியின் குடிவரவு அந்தஸ்து சிக்கலுக்குள்ளானது. பில்லியின் மறைவுக்குப் பின்னர், அவரது மகனுக்கும் மேரிக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டது. பில்லியின் மகன் மேரியை மிரட்டியதாகவும், வீட்டின் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பைத் துண்டித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தநிலையில், அலபாமா மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மேரி, தற்போது லூசியானாவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
"ஆபத்தான குற்றவாளியைப் போல எனது தாயின் கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு அழைத்துச் சென்றனர்" என பிரான்ஸில் வசிக்கும் அவரது மகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவரின் கோரிக்கைக்கு இணங்க, இதய நோய் மற்றும் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டுள்ள மேரியை விரைவில் பிரான்ஸிற்கு அழைத்து வர அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு தற்போது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரமான 'குடிபெயர்ந்தோர் வெளியேற்ற' நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே மேரி அதிரடி கைதுக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )