2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம்: கணிணி, தொலைபேசிகளையும் ஆராய்கிறது சிஐடி!
திறைசேரியிலிருந்து 2.5 அமெரிக்க டொலர் நிதி, மூன்றாம் நபரின் கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, திறைசேரியில் உள்ள கணினிகள், மடிக்கணினிகள், தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இந்த நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், திறைசேரியின் இந்த ஆழமான நிதி மோசடி தொடர்பாக, வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) திறந்த கூட்டமொன்றை அழைத்து, கணக்காய்வாளர் நாயகத்துடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு 'ஃப்ரீ லோயர்ஸ்' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷ கடந்த 30ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் இடம்பெற்றுள்ளது