ஏன் முள்ளிவாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் கொடுக்கிறார்கள்? நல்ல விளக்கம் பதில் உள்ளே.
முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் வரும்போதெல்லாம் ஒரு விவாதம் எழுகிறது:
“அன்று மக்கள் தகர டப்பாவிலும், பிளாஸ்டிக் வாளியிலும்தானே கஞ்சி குடித்தார்கள்… பிறகு ஏன் இப்போது சிரட்டையைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று. இந்த விமர்சனங்களுக்கு ஒரு எளிய உண்மையைச் சொல்ல விரும்புகிறேன்.
அடையாளம் என்பது நாம் கடந்து வந்த பாதையை மட்டும் சொல்வதல்ல; அந்தப் பாதையை உலகம் முழுக்க எப்படிக் கொண்டு சேர்க்கிறோம் என்பதில்தான் அதன் அர்த்தம் இருக்கிறது.
ஏன் சிரட்டை? “சிரட்டை” என்பது வெறும் பாத்திரமல்ல… அது எமது இனத்தின் ஒருமித்த அடையாளம். அது எம் மண்ணின் குறியீடு. முள்ளிவாய்க்காலில் மக்கள் அனுபவித்த பசியை ஒரு அடையாளமாக மாற்ற முற்படும்போது, அதற்கு அந்நியமான பிளாஸ்டிக் கிண்ணங்களையோ, சில்வர் பாத்திரங்களையோ விட, எமது நிலத்தோடும் மரபோடும் கலந்த “சிரட்டை” தான் மிகப் பொருத்தமான குறியீடு.
இன்று சிலருக்கு சிரட்டை ஒரு “அழகியல்” பொருளாகத் தெரியலாம். ஆனால் உலக வரலாற்றில் மிக எளிமையான பாத்திரங்களில் ஒன்றாகச் சொல்லப்படுவது சிரட்டைதான். “அன்று மக்கள் சிரட்டையில் கஞ்சி குடித்தார்கள்” என்பதல்ல வரலாறு. “அன்று சிரட்டை கூட இல்லாமல் கஞ்சி குடித்தார்கள்” என்பதுதான் வரலாறு. அந்த உண்மையை அடுத்த தலைமுறைக்குச் சொல்ல இன்று ஒரு குறியீடு தேவைப்படுகிறது.
அந்த அடையாளமே இந்தச் சிரட்டை. எம் மக்கள் அனுபவித்த அந்த உச்சக்கட்ட வறுமையையும் நிராதரவையும், சிரட்டை அளவுக்கு வேறு எந்தப் பாத்திரமும் பிரதிபலிக்க முடியாது.
மேலும், இது ஒரு சூழலியல் அறமும் கூட. ஆயிரக்கணக்கானோர் கூடும் நினைவேந்தல்களில் பிளாஸ்டிக் குப்பைகளை குவிப்பதை விட, மண்ணோடு மண்ணாக மட்கிப்போகும் சிரட்டை, எம் மக்களின் இயற்கை சார்ந்த வாழ்வியலையும் நினைவுபடுத்துகிறது.
விமர்சிப்பவர்களிடம் ஒரு கேள்வி: “அன்று சிரட்டை கிடைக்கவில்லை; அதனால் இன்று அதைப் பயன்படுத்தக் கூடாது” என்று சொல்வது, “அன்று மக்கள் கிழிந்த ஆடையில் இருந்தார்கள்; ஆகவே நினைவேந்தலுக்கும் கிழிந்த ஆடையில்தான் வர வேண்டும்” என்று சொல்வதைப் போன்றதல்லவா?
துயரத்தின் அடையாளமாக நாம் கருப்பு உடை அணிகிறோம். முள்ளிவாய்க்காலில் மக்கள் கருப்பு உடை அணிந்தபடி இறந்தார்களா? இல்லை.
ஆனால் அந்தத் துயரத்தை உலகுக்குச் சொல்ல “கருப்பு” ஒரு குறியீடாக மாறியது. அதேபோல, அந்தப் பசியைச் சொல்ல “சிரட்டை” ஒரு குறியீடு. நினைவேந்தல் என்பது ஒரு புகைப்படப் பிரதி அல்ல.
அது ஒரு இனத்தின் வலியையும் நினைவையும் ஆன்மாவோடு சுமந்து செல்லும் ஒரு ஊடகம். ஆகவே, சிரட்டையைப் பயன்படுத்தும் அதே வேளையில், அதில் ஊற்றப்படும் கஞ்சி சுவைக்காக அல்ல , அந்த வலியை நினைவூட்டும் “உப்புக் கஞ்சி”யாக இருப்பதை உறுதி செய்வோம்.
கஞ்சி குடிக்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும், “அன்று எம் மக்களுக்கு இந்தச் சிரட்டை கூட கிடைக்கவில்லை” என்ற உண்மையைச் சொல்லிக் கொடுப்போம். வரலாற்றை அப்படியே நகலெடுப்பது நினைவேந்தல் அல்ல.
சிரட்டை என்பது வெறும் தேங்காய் ஓடு அல்ல; சிதறடிக்கப்பட்ட ஒரு இனத்தின் ஒன்றுபட்ட அடையாளம். நாங்கள் வரலாற்றை நகலெடுக்கவில்லை (Re-enactment); வரலாற்றை நினைவுகூருகிறோம் (Commemoration).
விமர்சனங்களைத் தாண்டி, ஒரு இனமாக ஒன்றிணைந்து எமது அடையாளங்களை நிலை நிறுத்துவோம்.
(வீடியோ இங்கே )