உணவின்றித் தவிக்கும் மழலைகள்: ஆப்கானிஸ்தானில் தொடரும் மனிதாபிமான நெருக்கடி!
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை காரணமாக, பசியின் கொடுமையைத் தாங்க முடியாமல் பெற்ற பிள்ளைகளையே விற்கும் அவல நிலை தீவிரமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்தது முதற்கொண்டு, சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டதாலும், கடுமையான வறட்சி நிலவுவதாலும் அந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
இதனால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடுமையான பஞ்சத்தையும் பட்டினியையும் எதிர்கொண்டு வருகின்றனர். விற்கப்படும் மழலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, ஏழைப் குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.
தங்களது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பசியைப் போக்குவதற்கும், உயிரைக் காப்பாற்றுவதற்கும் வேறு வழியின்றி, பெற்ற பிள்ளைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை மிகக் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்குப் பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விலைக்கு வாங்கப்படும் குழந்தைகள் கட்டாயத் திருமணங்களுக்கும், வீட்டு வேலைகளுக்கும் உட்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை ஆப்கானிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் முறையான உணவின்றித் தவிப்பதாகவும், இதில் லட்சக்கணக்கான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை (UN) உள்ளிட்ட சர்வதேச நிவாரண அமைப்புகள் எச்சரித்துள்ளன.
உடனடியாக சர்வதேச நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தலையிட்டு மனிதாபிமான உதவிகளை வழங்காவிட்டால், பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயரும் என அஞ்சப்படுகிறது.
சொந்தப் பிள்ளைகளையே விற்கும் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் இந்த மனிதாபிமான அவலம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது.
(வீடியோ இங்கே )