செம்பியன்பற்று கடலில் மாயமான மீனவர் சக மீனவர்களால் உயிருடன் மீட்பு!
யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (ஜூன் 7) இரவு வழமை போல் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பாததால் குடும்பத்தினரிடையே அச்சமும், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தினர் உடனடியாக களத்தில் இறங்கி தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர்.
இத்தேடுதல் முயற்சிக்கு கடற்படையினரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். பல மணித்தியாலங்கள் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலின் பயனாக, கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டார்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குக் பின்னால் உள்ள அவல நிலை குறித்தும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்:
பொருளாதார நெருக்கடி: அன்றாட வாழ்க்கையை நகர்த்தவும், குடும்பப் பொருளாதாரத்தைக் கொண்டு செலுத்தவும் வேறு வழியின்றி, ஆபத்தான சூழலிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் விபத்துக்கள்: இத்தகைய பொருளாதாரக் காரணங்களால், அண்மைக்காலமாக மீனவர்கள் கடலில் காணாமல் போகும் மற்றும் விபத்துக்களுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன.
அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் அவசர கோரிக்கை மீனவர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாகத் தீர்வு காணவும், அவர்களின் உயிர்களையும் வாழ்வாதார உபகரணங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காலங்களில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர விழிப்புணர்வு திட்டங்களை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலநிலை மோசமாக இருக்கும் காலங்களில், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான குறுகிய கால நிவாரண நிதியுதவிகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.
இத்தகைய காத்திரமான நடவடிக்கைகள் மூலமே எதிர்காலத்தில் மீனவர்களின் உயிர் இழப்புக்களையும், வாழ்வாதாரப் பாதிப்புக்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
