யாழில் சமையல் எண்ணெய் விநியோக நிறுவனத்தில் ஒரு கோடி ரூபா நிதி மோசடி: விற்பனைப் பிரதிநிதி கைது!

#SriLanka #Jaffna #Arrest #Lanka4 #Oil #company #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
யாழில் சமையல் எண்ணெய் விநியோக நிறுவனத்தில் ஒரு கோடி ரூபா நிதி மோசடி: விற்பனைப் பிரதிநிதி கைது!

யாழ்ப்பாணத்தில் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்களை மொத்தமாக விநியோகித்து வரும் ஸ்தாபனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவிலான நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றிய நபர் ஒருவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் மேற்கொண்ட உள்ளக விசாரணையின் போது மோசடி தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், போலியான ஆவணங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி முத்திரைகள் (Rubber Stamps) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சிலர் இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடையிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதால், விசாரணைகளின் முன்னேற்றத்திற்கு அமைவாக கூடுதல் கைது நடவடிக்கைகளும் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஏற்பட்ட நிதி இழப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4