புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: மன்னார் திட்டத்திற்கான விசையாழிகள் வருகை!
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் புதிய மைல்கல்லாக அமையவுள்ள மன்னார் 50 MW 'HayWind' காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான இறுதித் தொகுதி விசையாழிகள் (Turbines) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
50 மெகாவாட் கொள்ளளவு கொண்ட இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான முதற்கட்ட விசையாழிகள் சில வாரங்களுக்கு முன்னர் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, தற்போது அவை உரிய இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் மின்சக்தி வரலாற்றில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு வழங்கப்படும் மிகக் குறைந்த விலையாக, இந்தத் திட்டத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக 0.0465 அமெரிக்க டாலர் (இலங்கை ரூபா 14.37) உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்ததும் புதைபடிவ எரிபொருள் (Fossil Fuel) இறக்குமதி குறைக்கப்படுவதால், ஆண்டுக்கு சுமார் 4.7 பில்லியன் ரூபா அளவிலான வெளிநாட்டு நாணயம் நாட்டிற்குச் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆண்டுதோறும் வளிமண்டலத்தில் கலக்கும் கார்பன் உமிழ்வை சுமார் 186,300 மெட்ரிக் தொன்னால் குறைக்க இதன் மூலம் வழிவகை ஏற்படும்.
2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யும் தேசிய ஆற்றல் இலக்கையும், 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை அடைய எதிர்பார்க்கும் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு (Net Zero) இலக்கையும் அடைவதற்கு இந்த மின் உற்பத்தி நிலையம் பெரிதும் பங்களிப்பு செய்யும்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை, வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்து தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டித்தன்மைமிக்க டெண்டர் நடைமுறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 'Hayleys Fentons PLC' நிறுவனம் இந்த விசையாழிகளை நிறுவி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதுடன், மின்சக்தி அமைச்சின் கீழுள்ள தேசிய கட்டமைப்பு மேலாளர் நிறுவனம் (NSO) இதன் கட்டமைப்பு கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே