நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சம்பவத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு நியமனம்!
நீர்கொழும்பு சிறைசாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தீர்க்கப்பட்டுவிட்டது என சிறைகள் மத்திய பேச்சாளரும் சிறைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
மோதலில் காயமடைந்த 36 கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சிகிச்சைக்குப் பிறகு மேலும் மூன்று கைதிகள் பல்லன்சேன முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இன்றுவரை, நீர்கொழும்பு சிறையில் 2,417 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறை அதிகாரிகள் தலையிட்டதால், உள்ளே இருந்த நிலைமை தற்போது முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைக் கைதிகளும் உதவினர். மேலும், சிறைக்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் இராணுவமும் ஈடுபடுத்தப்பட்டன.
பெண் கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதியில் பதற்றமான சூழல் நிலவியபோதிலும், அதையும் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது பெண் கைதிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் சிறைக் கைதிகளுக்கு இடையேயான ஒரு மோதல் மட்டுமே. அதிகாரிகளுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கைதிகளின் உறவினர்கள் தேவையற்ற அச்சத்தையோ பீதியையோ ஏற்படுத்தக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் நாளை வழங்கப்படும். இந்தச் சம்பவத்தை விசாரிக்க, சிறைத்துறை ஆணையர் நாயகம் தற்போது ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே