துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்: சக அதிகாரிகள் கோரிக்கை!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 6ஆம் திகதி காலை ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது, சிறைச்சாலையில் இருந்த ஆபத்தான கைதிகள் சிலர் திட்டமிட்ட முறையில் தப்பியோட முயன்றுள்ளனர். இதனை அங்கு கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதே இரு தரப்பினருக்கும் இடையே இந்த பயங்கர மோதல் வெடித்துள்ளது.
கைதிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் 7 சிறைச்சாலை அதிகாரிகள் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த சில அதிகாரிகள் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிலையும், பாதுகாப்பையும் மீறி வெளியேற முற்பட்ட கட்டத்தில், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த துரித நடவடிக்கை எடுக்கப்படாதிருந்தால், பல நூறு கைதிகள் தப்பியோடுவதுடன் சிறைச்சாலையினுள் இருக்கும் ஏனைய அதிகாரிகளின் உயிருக்கும் பெரும் ஆபத்து நேர்ந்திருக்கும் என அங்குள்ள ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த மோதல் சம்பவம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆராய, நீதி அமைச்சின் செயலாளரின் நேரடி மேற்பார்வையில் விசேட உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கைதிகளுக்கு வெளியில் இருந்து ஏதேனும் உதவிகள் கிடைத்ததா மற்றும் ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் சிஐடி (CID) மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே