பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வீதி திருவிழாவுக்காக தற்காலிகமாக திறப்பு!
பலாலி உயர்பாதுகாப்பு வலையமைப்பிற்குள் அமைந்துள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியானது, கடந்த பல வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தமையால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆலயத்திற்குச் செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
தற்போது ஆரம்பமாகவுள்ள வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் எவ்வித தடையுமின்றி வந்து செல்ல தற்காலிகமாக தினமும் 16 மணித்தியாலங்கள் (காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை) இந்த வீதியைப் பயன்படுத்த இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகரின் விசேட அறிவுறுத்தலின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்துள்ளது.
திருவிழா காலத்தைத் தொடர்ந்து, இன்னும் ஒரு மாத காலப் பகுதிக்குள் இப்பாதையை முழுமையாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவிப்பதற்கான ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டை இராணுவம் தெரிவித்துள்ளது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆலய வீதி திறப்பு மட்டுமன்றி, பலாலி கிழக்கு பகுதியில் நீண்டகாலமாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இடம்பெயர்ந்து முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் முகமாக, முதற்கட்டமாக சில காணிப் பகுதிகளை விடுவிப்பதற்கான சாதகமான சமிக்ஞைகளை இராணுவத் தரப்பு வெளியிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே