கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க ஆஜர்!
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பொதுப் பணம் மற்றும் அரச வளங்களைத் தவறான முறையில், அரசியல் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) விடுக்கப்பட்ட உத்தரவு இந்த நிதி முறைகேடு புகார் தொடர்பாகத் துரித விசாரணைகளை முன்னெடுத்து, அதன் தற்போதைய முன்னேற்ற அறிக்கையை (B Report) இன்றைய தினம் (08) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த தவணையின் போது கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
அதற்கமைய, சிஐடி அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகியதை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ரணில் விக்ரமசிங்க சார்பில் மூத்த சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தது.
அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்திய விதம் மற்றும் அதற்கான அனுமதிகள் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய தரப்பினரிடமும் வாக்குமூலங்களைப் பெறவுள்ளதாகத் தெரிகிறது.
வழக்கின் மேலதிக விசாரணைகளை நீதிமன்றம் அடுத்த திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே