மூதூரில் வேகமாகப் பரவும் டெங்கு: இராணுவத்தினருடன் இணைந்து சுகாதாரப் பிரிவினர் விசேட சிரமதானம்!
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் தேவைப்பட்டன.
மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகில் அதிகளவில் நீர் தேங்கி, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்குக் காரணியாக அமைந்திருந்த பிரதான நீரோடை மற்றும் மணிக்கூட்டு கோபுரச் சந்திக்கு அண்மித்த பகுதிகள் இந்த விசேட சிரமதானத்தின் போது துப்புரவு செய்யப்பட்டன.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நூர் முகம்மது கஸ்ஸாலி அவர்களின் ஆலோசனையின் கீழ், மூதூர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் (PHI) நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இப்பகுதியில் உள்ள முட்புதர்கள் மற்றும் நீரோடைகளில் தேங்கிக் கிடந்த கழிவுகளை அகற்றும் கடினமான பணிகளில் இராணுவத்தினர் நேரடியாகக் களமிறங்கி, இப்பகுதியை முழுமையாகத் துப்புரவு செய்துள்ளனர்.
டெங்கு பரவலை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளின் நடவடிக்கைகள் மாத்திரம் போதாது எனச் சுட்டிக்காட்டியுள்ள மூதூர் சுகாதாரப் பிரிவினர், பொதுமக்களுக்குச் சில அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்:
பொதுமக்கள் தங்களது வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களை வாரத்திற்கு ஒருமுறையாவது முழுமையாகச் சோதித்து தூய்மையாகப் பேண வேண்டும்.
வீடுகளிலுள்ள தயர், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் மற்றும் நீர் தேங்கக்கூடிய ஏனைய பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த அல்லது அழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே