"புலிகள் காலத்தில் இந்திய மீனவர் அத்துமீறல் தடுக்கப்பட்டிருந்தது" - மன்னார் மீனவ சங்கம்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள், தற்போது உள்ளூர் மீனவர்களின் இறங்குதுறைகள் வரை வந்து மீன்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனைத் தடுக்க கடற்றொழில் அமைச்சர் எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்.மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாக காலப்பகுதியில் இந்த எல்லை தாண்டிய மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் அனைத்தும் முழுமையாகத் தடுக்கப்பட்டிருந்தன.
ஆனால், யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நிலைமை மோசமடைந்துள்ளது. டைனமட், சுருக்குவலை, இழுவைப்படகுகள், தங்கூசி வலைகள் உட்பட 14 வகையான தடை செய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகள் தற்போது மன்னார் மற்றும் வடக்கு கடற்பரப்பில் பெருவாரியாகப் பெருகியுள்ளன.
தற்போதைய கடற்றொழில் அமைச்சர் பொறுப்பேற்ற இந்த ஒன்றரை வருடத்திற்குள் அவரை 15 தடவைகளுக்கும் மேலாகச் சந்தித்து முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை.
அவர் கருத்துக்களைக் கேட்டுப் பெறுகிறாரே தவிர, நடைமுறையில் எதையும் செய்யவில்லை. சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க முந்தைய அரசாங்கங்கள் தவறியதைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
திணைக்களங்களும் இதற்குப் பொறுப்புக்கூறுவதில்லை.
உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் இந்தச் சட்டவிரோத மீன்பிடித் தொழிலை நிறுத்த எந்தவொரு தரப்பும் முறையான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே