நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - எவ்வித பிரயோசனமும் இல்லை என்கிறார் சீலரத்ன தேரர்!
நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்றும் அதனை ஆளும் தரப்பு வெற்றிகரமாக முறியடிக்கும் எனவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு 159 உறுப்பினர்களின் பலம் காணப்படுகின்றது.
அதனுடன் ஜனாதிபதியையும் சேர்த்தால் 160 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய சூழலில் எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் ஒரே கொள்கையுடையவர்களாகவே செயற்படுகின்றனர்.
எனவே, அவர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மிக எளிதாகத் தோற்கடித்து செயலிழக்கச் செய்துவிடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகப் பலவீனம் மற்றும் தளர்வுப் போக்குக் காரணமாகவே நாட்டின் சிறைச்சாலைகள் இந்த அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளன என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
அண்மையில் தற்போதைய நீதி அமைச்சர் பாராமன்றத்துக்குள் பகிரங்கமாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்புக் கோரியிருந்தார். அரசியல் ரீதியாகப் பக்குவப்படாத, இன்னும் சிறு பிள்ளைத் தனமாகச் செயற்படும் ஒருவரால் இவ்வாறான பொறுப்பு வாய்ந்த பதவிகளைச் சரியாகக் கையாள முடியாது. வயது முதிர்ந்து, அறிவுப் பக்குவம் ஏற்படும் போதே ஒருவருக்குச் சிறந்த நிர்வாகத் திறன் கிட்டும்” என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே