மலையகத்தில் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றம் - சொந்த காணியின்மையால் எழுந்த பிரச்சினை!
இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (12) நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை 10ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், அப்பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த 06 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் தற்காலிக தங்குமிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் களவிஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர். பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், "இந்த வெளியேற்ற நடவடிக்கையானது கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பாகவே அமைந்திருந்தது.
எனினும், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை எனப் பலர் தவறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அது முற்றிலும் பிழையானதொரு கண்ணோட்டமாகும்." எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை முழுமையாக ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும், உரிய சட்ட மற்றும் நிர்வாக நகர்வுகளின் பின்னர் அவர்களுக்கு மிக விரைவாக நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே